செய்திகள்
மத்திய அரசு

வெள்ள நிவாரணம்: கர்நாடகத்துக்கு ரூ.1,200 கோடி நிதியை ஒதுக்கியது மத்திய அரசு

Published On 2019-10-05 02:04 GMT   |   Update On 2019-10-05 02:04 GMT
கர்நாடகத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக இடைக்கால நிவாரணமாக ரூ.1,200 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக ரூ.38 ஆயிரத்து 451 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாநிலத்தில் மழையால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் மொத்த மதிப்பு குறித்தும், நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் இழப்பு மூலமாக ரூ.3,818 கோடி நிதி வழங்க வேண்டும் என்று கோரியும் மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அறிக்கை அளித்திருந்தது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் மழை பாதிப்புகள் குறித்து மத்திய குழு கர்நாடகத்தில் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளித்திருந்தது.

ஆனால் மழை பாதிப்பு குறித்து கர்நாடக அரசு வழங்கிய நஷ்டத்தின் மதிப்பும், மத்திய குழு வழங்கிய நஷ்ட மதிப்பும் முரண்பட்டு இருப்பதாக கூறி, கர்நாடக அரசு வழங்கிய அறிக்கையை மத்திய உள்துறை நிராகரித்து இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது மழை, வெள்ளத்தால் 2 லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்திருப்பதாகவும், அந்த வீடுகளை கட்டுவதற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டி இருப்பதாகவும் கர்நாடக அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் மத்திய குழுவினர் அறிக்கையின்படி கர்நாடகத்தில் 1 லட்சத்து 16 ஆயிரம் வீடுகள் மட்டுமே முற்றிலும் சேதம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கர்நாடக அரசின் அறிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பது குறித்து பெலகாவியில் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

“மாநிலத்தில் மழை பாதிப்புகள் மற்றும் நஷ்டத்தின் மதிப்பு குறித்து மத்திய அரசுக்கு அளித்திருந்த அறிக்கையிலும், மத்திய குழு ஆய்வு செய்து வழங்கி இருந்த அறிக்கையிலும் சில முரண்பாடுகள் இருந்துள்ளது. இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி மாநில அரசிடம், மத்திய உள்துறை அதிகாரிகள் கேட்டு இருந்தனர். அதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்து உள்ளனர். ஆனால் கர்நாடக அரசு வழங்கிய அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. அதுதொடர்பாக வரும் செய்திகளில் உண்மை எதுவும் இல்லை.

மழை பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரிடம் நானே உரிய விளக்கம் அளித்துள்ளேன். நிவாரணமும் கேட்டுள்ளேன். மத்திய அரசு நிவாரணம் வழங்காது என்று பரவும் செய்திகளை மக்கள் காதில் வாங்கி கொள்ள வேண்டாம்.

கர்நாடகம் தவிர மேலும் 8 மாநிலங்களில் பெரிய அளவில் மழை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை. ஆனால் கர்நாடகத்திற்கு மழை பாதிப்புக்கான நிவாரண நிதி வழங்குவதுடன், சிறப்பு நிதி வழங்கும்படியும் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். கர்நாடகத்திற்கு மத்திய அரசு கூடுதலான நிவாரண நிதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு வேண்டும் என்றே காலதாமதம் செய்யவில்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதால் நிவாரணம் வழங்க தாமதமாகி இருக்கிறது.



மாநில அரசு முயன்றவரை மழை பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் நடைபெற வாய்ப்பே இல்லை. எனது தலைமையிலான பா.ஜனதா அரசு கவிழ்ந்து விடும் என்று எதிர்க்கட்சிகள் பகல்கனவு காண்கின்றன. அந்த கனவு பலிக்காது. இந்த அரசு மீதமுள்ள ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும். இடைத்தேர்தலுக்கு முன்பாக கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என்று தேவேகவுடா கூறி இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதுபோன்ற சூழ்நிலை தற்போது மாநிலத்தில் இல்லை.”

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதற்கிடையில், மத்திய உள்துறை இலாகா விளக்கம் கேட்டு இருந்ததால், அதுகுறித்து கர்நாடக வருவாய்த்துறை அதிகாரிகள் டெல்லியில் மத்திய உள்துறை அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்திருந்தனர். அதே நேரத்தில் ஏற்கனவே கர்நாடக அரசு அளித்திருந்த நஷ்டத்தின் மதிப்பை ரூ.3 ஆயிரம் கோடியை குறைத்தும், தேசிய பேரிடர் இழப்பில் இருந்து ரூ.600 கோடியை குறைத்தும், அதுபோல, வீடுகளின் சேத மதிப்பை 2.25 லட்சத்தில் இருந்து 1.16 லட்சம் வீடுகளாக குறைத்தும் மத்திய உள்துறையிடம் அறிக்கை அளித்திருப்பதாக தகவல் வெளியானது.

அந்த புதிய அறிக்கையின்படி ரூ.35,168 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், தேசிய பேரிடர் இழப்பு மூலமாக ரூ.3,200 கோடி வழங்கும்படியும் மத்திய உள்துறைக்கு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால நிதியாக ரூ.1,200 கோடியை ஒதுக்கி மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது தேசிய பேரிடர் இழப்பு நிதியில் இருந்து கர்நாடகத்திற்கு ரூ.1,200 கோடியை ஒதுக்கி இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.3,200 கோடி கேட்கப்பட்டதாகவும், ரூ.1,200 கோடி தான் மத்திய அரசு நிதி வழங்கி இருப்பதாகவும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டரில், “கர்நாடகத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள இடைக்கால நிதியாக மத்திய அரசு ரூ.1,200 கோடியை ஒதுக்கியுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு கர்நாடக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்“ என்று கூறியுள்ளார். 
Tags:    

Similar News