செய்திகள்
உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் - சிவசேனா, பாஜக கூட்டணி இடையே தொகுதி பங்கீடு நிறைவு

Published On 2019-10-04 14:13 GMT   |   Update On 2019-10-04 14:13 GMT
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி இடையே தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளதாக இரு கட்சியினரும் தெரிவித்தனர்.
மும்பை :

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளன. அந்த கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிட்டு, எஞ்சிய 38 தொகுதிகளை கூட்டணியில் இடம்பெறும் மற்ற சிறிய கட்சிகளுக்கு வழங்க உள்ளதாக அறிவித்தன.
 
ஆனால் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளின் கூட்டணி உறுதியாகிவிட்டபோதிலும், அந்த கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு இதுவரை ஏற்படவில்லை. இன்னும் சில நாட்களில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி இடையே தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளதாக இரு கட்சியினரும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, முதல் மந்திரி வேட்பாளரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக 148 தொகுதிகளிலும், சிவசேனா 126 தொகுதிகளிலும், பிற கூட்டணி கட்சிகளுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்  என தெரிவித்தனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க. 122 இ்டங்களையும், சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News