செய்திகள்
சிறைக் கைதிகள் விடுதலை (மாதிரிப்படம்)

காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு 611 கைதிகள் விடுதலை

Published On 2019-10-04 12:32 GMT   |   Update On 2019-10-04 12:32 GMT
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி இந்த ஆண்டு நன்னடத்தை அடிப்படையில் 611 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:

தேசத் தந்தை காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் மொத்தம் 611 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, நன்னடத்தை அடிப்படையில் சிறைக் கைதிகளை விடுவிக்கும் சிறப்புத் திட்டத்திற்கு, பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

மூன்று கட்டங்களாக விடுதலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 2018 அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த தினத்தன்று ஒரு பிரிவு கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். இரண்டாவது கட்டமாக 2019 ஏப்ரல் 6-ம் தேதி (சம்பாரன் சத்தியாகிரக ஆண்டு தினம்) ஒரு பிரிவு கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். மூன்றாவது கட்டமாக 2019 அக்டோபர் 2-ம் தேதி (மகாத்மா காந்தி பிறந்த தினம்) மற்றொரு பிரிவு கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள், என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, முதல் கட்டமாக கடந்த ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த தினத்தன்று நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து மொத்தம் 919 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி 505 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கடந்த புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையடுத்து மூன்றாம் கட்டமாக நேற்று முன்தினம் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து மொத்தம் 611 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சிறப்புத்திட்டம் மூலம் இது வரை 2,035 பேர் விடுதலையாகியுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News