செய்திகள்
சோனியா காந்தி

நாட்டில் நடப்பவற்றை பார்த்தால் காந்தியின் ஆன்மா வேதனைப்படும் - சோனியா காந்தி

Published On 2019-10-02 08:50 GMT   |   Update On 2019-10-02 10:20 GMT
இந்தியாவில் சில ஆண்டுகளாக நடப்பவற்றை பார்த்தால் காந்தியின் ஆன்மா வேதனைப்படும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லியில் நடைபெற்ற பேரணிகளில் பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர். ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


ராஜ்காட் பகுதியில் கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் காந்தியின் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் கடைபிடித்து வாழ்வோம் என்று சோனியா காந்தி முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர்.

அவர்களிடையே இந்தியில் பேசிய சோனியா காந்தி,  இந்தியாவில் சில ஆண்டுகளாக நடப்பவற்றை பார்த்தால் காந்தியின் ஆன்மா வேதனைப்படும் என வருத்தத்துடன் தெரிவித்தார்.

'காந்தியும் இந்தியாவும் ஒருமித்து ஒருங்கிணைந்த ஒன்றாகும். காந்தியால் தான் இந்தியா இன்றைய நிலைக்கு வந்துள்ளது. ஆனால், சிலர் இந்தியாவுடன் ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என கருதுகின்றனர்.

யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. காங்கிரஸ் கட்சி மட்டும்தான் காந்தியின் பாதையை பின்பற்றி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் ஆகியவற்றை செய்து தந்துள்ளது.

தங்களை மிகவும் உயர்வானவர்கள் என்று கருதிக்கொள்பவர்கள் மகாத்மா காந்தியின் தியாகங்களை எப்படி புரிந்து கொள்வார்கள்? பொய்களை அடிப்படையாக வைத்து அரசியல் செய்பவர்களுக்கு காந்தியின் அகிம்சை தத்துவம் புரியாது’ எனவும் சோனியா கூறினார்.
Tags:    

Similar News