செய்திகள்
ரவி சங்கர் பிரசாத் ஆய்வு செய்த காட்சி

பீகார்: வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய மந்திரி நேரில் ஆய்வு

Published On 2019-10-01 14:28 GMT   |   Update On 2019-10-01 14:28 GMT
பீகாரில் தொடர்ந்து பெய்த கனமழைக்கு 50 பேர் பலியான நிலையில் பாட்னா நகரில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் இன்று ஆய்வு செய்தார்.
பாட்னா:

பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த பெருமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால், தலைநகர் பாட்னா மற்றும் முக்கிய நகரங்கள், கிராமங்களில் மக்களிம் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாட்னாவில் பெய்த கன மழையால் ராஜேந்திரா நகரில் உள்ள துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடியின் வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் அவரும், அவரது குடும்பத்தினரும் கடந்த சனிக்கிழமையில் இருந்து வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

 3 நாட்களுக்கு பிறகு நேற்று அந்த பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சென்று துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடியையும், அவரது குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்டு, ரப்பர் படகின் மூலம் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி நிதிஷ்குமார் பார்வையிட்டார். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



கன மழையால் பீகார் மாநிலத்தின் பல்வேறு ரெயில் நிலையங்களிலும் வெள்ளம் புகுந்திருப்பதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. சில ரெயில்கள் வேறு வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன. மழையால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பீகாரில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது

மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ள நிலையில் பாட்னா நகரில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மந்திரியும் பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.யுமான ரவி சங்கர் பிரசாத் இன்று ஆய்வு செய்தார்.

மாநில அரசு சார்பில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்ட அவர் சில இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News