செய்திகள்
உச்ச நீதிமன்றம்

எஸ்சி,எஸ்டி சட்டம்- மத்திய அரசின் சீராய்வு வழக்கில் இன்று தீர்ப்பு

Published On 2019-10-01 03:58 GMT   |   Update On 2019-10-01 03:58 GMT
எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த சீராய்வு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
புதுடெல்லி:

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில், இந்த தீர்ப்பு அமைந்திருந்ததாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், கடும் அழுத்தத்துக்குள்ளான மத்திய அரசு,  பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியது. அதன்படி, இந்த சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் பெற முடியாது.

அதேசமயம் உச்ச நீதிமன்ற  தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் கடந்த மாதம் 18-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிபதிகள் அருண் மிஷ்ரா, வினீத் சரண், ரவீந்திர பட் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.
Tags:    

Similar News