செய்திகள்
காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா

மோடி-டிரம்ப் சந்திப்பு, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை - காங்கிரஸ் கருத்து

Published On 2019-09-30 02:45 GMT   |   Update On 2019-09-30 02:45 GMT
பிரதமர் மோடி-டிரம்ப் சந்திப்பு, இந்தியாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி விட்டது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா, ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி-அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோர் சந்திப்பு குறித்து பா.ஜனதா மிகுந்த எதிர்பார்ப்பை கிளறி விட்டது. இந்த சந்திப்பை கொண்டாடி வருகிறது. இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை இச்சந்திப்பு வெளிப்படையாக உணர்த்தியது. ஆனால், இந்தியாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி விட்டது. அதனால், இதில் கொண்டாடுவதற்கு எதுவுமே இல்லை.

அமெரிக்க சந்தைக்கான இந்திய ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்தல், இந்திய தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு எச்1-பி விசா எண்ணிக்கையை குறைத்ததை வாபஸ் வாங்குதல், விசா கட்டண உயர்வை வாபஸ் வாங்குதல் ஆகிய கோரிக்கைகளுக்கு டிரம்பை சம்மதிக்க வைக்க மோடியால் முடியவில்லை. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தையும் இறுதி செய்ய தவறி விட்டார். இதனால் இந்திய தொழிலதிபர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், பிற நாட்டு தலைவர்களை மோடி சந்தித்ததில் எந்த விசேஷ முக்கியத்துவமும் இல்லை. அவையெல்லாம் வழக்கமானவைதான்.



பிரதமர் மோடி, தனது சொந்த பிரசாரத்திலேயே கவனமாக இருக்கிறார். பொருளாதார நெருக்கடி, முதலீட்டு வீழ்ச்சி, தொழில் உற்பத்தி வீழ்ச்சி, வேலை இழப்பு ஆகியவற்றுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று செயல்படுகிறார். இந்த உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த இதுவே தக்க தருணம்.

அதே சமயத்தில், பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாத பிரச்சினைகளில் பிரதமர் எடுத்த நிலைப்பாட்டுக்கு முழுமையாக உடன்படுகிறோம். காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை திரும்பத்திரும்ப சொல்லி வருவதற்காக பிரதமரை பாராட்டுகிறோம். காஷ்மீர் பிரச்சினை, இந்தியாவின் உள்விவகாரம் என்றும், அதில் மூன்றாம் நாட்டின் தலையீடு கூடாது என்றும் நிலைப்பாடு எடுத்ததை ஆதரிக்கிறோம்.

மேலும், ஐ.நா. சபையில், ஆத்திரத்தை தூண்டும் வகையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பேச்சு, பிரதமர் பதவிக்கு உகந்ததாக இல்லை. இந்தியாவை களங்கப்படுத்த பொய்யான தகவல்களை சொல்லி, சர்வதேச நாடுகளின் கவனத்தை திசைதிருப்புவதை அவர் நோக்கமாக கொண்டுள்ளார்.

இவ்வாறு ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
Tags:    

Similar News