செய்திகள்
பேட்டியின் போது அஜித் பவார் கண்ணீர் விட்டு அழுத காட்சி

என் உறவினர் என்பதால் சரத் பவாருக்கு சிக்கல் - அஜித் பவார்

Published On 2019-09-28 18:27 GMT   |   Update On 2019-09-28 18:27 GMT
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் என் உறவினர் என்பதால்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை:

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார். அந்த கட்சியின் மூத்த தலைவரான இவர் மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரி ஆவார். பாராமதி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார்.

இந்த சூழ்நிலையில் அஜித்பவார் நேற்று திடீரென சபாநாயகர் அலுவலகம் சென்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அப்போது சபாநாயகர் அங்கு இல்லை. இதனால் அவரது செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

முன்னதாக மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில் 25 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 75 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அஜித் பவார் இன்று சரத்பவாரை சந்தித்து பேசினார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து அஜித் பவார் செய்தியாளர்கள் சந்திப்பில், “ எனது தலைவர், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்களிடம் ஆலோசனை செய்து இந்த முடிவை எடுக்காததற்கு மன்னிப்பு கேட்கிறேன். நெருக்கடியில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு, மராட்டிய கூட்டுறவு வங்கி நிதியுதவி வழங்கியுள்ளது. இதில் நிதி முறைகேடு ஏதும் நடக்கவில்லை. சரத்பவாருக்கு, இந்த வங்கியுடன் எந்த தொடர்பும் இல்லை. சரத்பவார் எந்த காலத்திலும், அந்த வங்கியின் இயக்குனராக இருக்கவில்லை. அவர் எனது உறவினர் என்பதற்காகவே, அவரது பெயரை இந்த வழக்கில், இணைத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். என்னால் தான் அவர் களங்கப்படுத்தபடுகிறார்” என்று கூறினார். பேட்டியின் போது அஜித் பவார் கண்ணீர் விட்டு அழுதார்.
Tags:    

Similar News