செய்திகள்
பயங்கரவாதிகள்

நவராத்திரி திருவிழாவையொட்டி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் - ராணுவம் எச்சரிக்கை

Published On 2019-09-24 07:47 GMT   |   Update On 2019-09-24 07:47 GMT
நவராத்திரி திருவிழாவை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஊடுருவ செய்து வருகிறது.

இவ்வாறு 60 பயங்கரவாதிகள் வரை தற்போது காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி இருப்பதாக உளவு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் 400-லிருந்து 500 பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவுவதற்காக தயாராக இருக்கிறார்கள்.

அவர்கள் இன்னும் ஒன்றிரண்டு நாளில் அதிக அளவில் ஊடுருவக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 10-லிருந்து 12 ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது பெரிய அளவில் ஊடுருவுவதற்கு அவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

அடுத்த 3 அல்லது 4 நாட்களில் எல்லை பகுதியில் உள்ள ஹெரன், யூரி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் இந்த ஊடுருவல் நடைபெறலாம் என கருதி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



விரைவில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. வடமாநிலங்களில் இந்த பண்டிகை ஒரு வார காலத்திற்கு சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த பண்டிகையை சீர்குலைக்கும் வகையில் அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் கூறினார்கள். எனவே அனைத்து மாநிலங்களிலும் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐ.நா. சபை பொதுசபை கூட்டம் நடக்க உள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் மத்தியில் நிதி நடவடிக்கை குழு (பேத்) கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News