செய்திகள்
ப சிதம்பரம்

ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்லமாட்டேன் - டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் விளக்கம்

Published On 2019-09-23 08:32 GMT   |   Update On 2019-09-23 08:32 GMT
நான் பொறுப்புமிக்க குடிமகன், ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன் என்று டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் விளக்க மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 3-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 11-ந்தேதி மனு தாக்கல் செய்தார். “அரசியல் பழிவாங்கும் நோக்கில் தன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதனால் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ. பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதற்கிடையே ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை கடந்த 20-ந்தேதி தாக்கல் செய்தது.

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி சுரேஷ் கைட் முன்னிலையில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.



இந்த நிலையில் ஜாமீனுக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து ப.சிதம்பரம் விளக்க மனு ஒன்றை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் எம்.பி.யாக இருக்கிறேன். பொறுப்புமிக்க குடிமகன். ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு செல்ல மாட்டேன். வெளிநாடு தப்பி விடுவேன் என்று சி.பி.ஐ. சொல்வது முற்றிலும் தவறானது. என் மீதான குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் டுவிட்டரில் பதிவை வெளியிட்டு வருகிறார்கள். இன்று வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

சிறையில் இருக்கும் என்னை சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் சந்தித்தது பெருமை அளிக்கிறது. நீண்ட நெடுங்காலமாக வலிமையுடனும், துணிச்சலுடனும் காங்கிரஸ் கட்சி இருப்பது போல நானும் இருக்கிறேன்.

வேலை இழப்பு, கும்பல் தாக்குதல், எதிர்க்கட்சியினரை சிறை தள்ளுதல் போன்றவையே இந்த ஆட்சியில் சிறப்பாக இருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News