செய்திகள்
கோப்பு படம்

ஜார்க்கண்டில் அட்டூழியம் - பசுவை கொன்றதாக ஒருவர் அடித்துக் கொலை

Published On 2019-09-23 07:27 GMT   |   Update On 2019-09-23 07:27 GMT
ஜார்க்கண்டில் பசுவை கொன்றதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஞ்சி, செப். 23-

வட மாநிலங்களில் பசுக்கள் கொல்லப்படுவதாக கூறி கும்பல் தாக்குதல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதில் பலர் உயிரிழந்துள்ளனர். அது போன்ற சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள குந்தி பகுதியில் உள்ள கிராமங்களில் பசுக்கள் கொல்லப்பட்டு இறைச்சி கடத்தப்படுவதாக தகவல் பரவியது.

அத்தகைய சம்பவங்கள் நடைபெறுகிறதா என அப்பகுதி கிராம மக்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ஜலதங்கா என்ற கிராமத்தில் 3 பேர் பசுவின் உடலுடன் இருப்பதாக தகவல் கிடைத்தது.

உடனே கும்பலாக சென்ற கிராம மக்கள் பசுவின் உடலுடன் இருந்த 3 பேரை சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று கும்பலிடம் இருந்து 3 பேரையும் மீட்டனர்.

படுகாயம் அடைந்த அவர்கள் அனைவரும் ராஞ்சி யில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

அவரது பெயர் கலாந்தஸ் பர்லா. கோபால் பூர் கிராமத்தை சேர்ந்தவர். இவர் தவிர பாகு கச்சாப் மற்றும் பிலிப் கோரோ ஆகிய 2 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தகவலை டி.ஐ.ஜி. ஏ.வி. கோம்கர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12-க்கும் மேற்பட்ட குற்ற வாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் டி.ஐ.ஜி. கோம்கர் கூறினார்.

Tags:    

Similar News