செய்திகள்
உரிக்காமலேயே கண் கலங்க வைக்கும் வெங்காயத்தின் விலை!

சதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் - பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்

Published On 2019-09-22 11:57 GMT   |   Update On 2019-09-22 11:57 GMT
இந்தியர்கள் வீட்டு சமையல் அறையில் பிரதான இடம் பிடித்துள்ள வெங்காயத்தின் விலை இன்னும் சில நாட்களில் நூறு ரூபாயை தொடக்கூடும் என ஏழை, எளிய மக்கள் கவலைப்பட தொடங்கியுள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, குஜராத், கிழக்கு  ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபநாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் வெங்காயம் பயிர்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. இதனால் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சந்தைகளில் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், சமீபகாலமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வெங்காயத்தின் மொத்த விலையும் சில்லறை விலையும் கிடுகிடுவென மேல் உயர்ந்து வருகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான மராட்டிய மாநிலம் லசல்கோன் சந்தையில், கடந்த வார நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 45  ரூபாயாக உயர்ந்தது.



கடந்த வாரத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை சென்னையில் 38 ரூபாயாகவும் கொல்கத்தாவில் 48 ரூபாயாகவும் மும்பையில் 56 ரூபாயாகாவும் டெல்லியில் 57 ரூபாயாகவும் இருந்தது.

ஆனால், இந்த வார நிலவரப்படி சராசரியாக 70 முதல் 80 ரூபாய் என்னும் அளவுக்கு வெங்காயத்தின் விலை அனைத்து இடங்களிலும் ஏற்றம் கண்டுள்ளது.

நாட்டின் தற்போதைய வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வு தொடரும் என வேளாண் வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேநிலை நீடித்தால், இன்னும் சில நாட்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நூறு ரூபாயை கடந்து விடக்கூடும் என ஏழை, எளிய மக்கள் இப்போதே அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மழையினால் பாதிக்கப்பட்ட விளைச்சல் உள்ள மாநிலங்களில் இருந்து வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை படிப்படியால ஏறி வருகிறது.

மத்திய அரசின் ‘நாஃபெட்’ கூட்டுறவு அங்காடிகள் மூலம் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து அனுப்பப்படும் வெங்காயம் டெல்லி உள்ளிட்ட நாட்டின் பிறபகுதிகளில் ஒரு கிலோ 22 ரூபாய் என்ற விலையில் அளிக்கப்படுகிறது.

மத்திய அரசின் தொகுப்பில் இருந்த 56 ஆயிரம் டன் வெங்காயத்தில் 16 ஆயிரம் டன் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் மொத்த விற்பனையாளர்கள் கையிருப்பில் வைக்கும் வெங்காயத்தின் அளவுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Tags:    

Similar News