செய்திகள்
குமாரசாமி

தொலைபேசி ஒட்டுகேட்புக்கும் எனக்கும் தொடர்பு இல்லை- குமாரசாமி

Published On 2019-09-21 01:57 GMT   |   Update On 2019-09-21 01:57 GMT
தொலைபேசி ஒட்டுகேட்புக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், விசாரணை அமைப்புகளை கண்டு கவலைப்படவில்லை என்றும் குமாரசாமி கூறினார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சென்னப்பட்டணாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக சொல்கிறார்கள். தொலைபேசி ஒட்டுகேட்புக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. உளவுத்துறை எனது வசம் தான் இருந்தது. அந்த பிரிவின் தலைவர், என்னை தினமும் காலை 6 மணிக்கு நேரில் சந்தித்து மாநிலத்தில் நடைபெறும் நிகழ்வுகளை கூறுவார்.

அவர் அந்த தகவல்களை எப்படி சேகரித்தார் என்பது எனக்கு தெரியாது. தொலைபேசிகளை ஒட்டுகேட்கும்படி நான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதற்கான அதிகாரமும் முதல்-மந்திரிக்கு இல்லை. இது உளவுத்துறை சம்பந்தப்பட்ட விஷயம். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை கண்டு நான் கவலைப்படவில்லை. அந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது எனக்கு தெரியும். முதல்-மந்திரியாக இருந்தபோது, அமெரிக்கா சென்றிருந்தேன். அப்போது கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.

ஆட்சியை காப்பாற்றும் எண்ணம் இருந்திருந்தால், தொலைபேசிகளை ஒட்டுகேட்டிருக்க முடியும். நான் அதை செய்யவில்லை. எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் விலை கொடுத்து வாங்கியது இந்த மாநில மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக சில நாட்கள் காத்திருந்தோம்.

வருகிற 30-ந் தேதி 130 தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் பெங்களூருவில் நடக்கிறது. இதில் கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவோம். எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வை வாங்க எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ உரையாடல் எனக்கு கிடைத்தது. அன்று நான் நினைத்திருந்தால், எடியூரப்பாவை சிறையில் தள்ளியிருக்க முடியும். ஆனால் நான் அதை செய்யவில்லை.



என்னிடம் பாவத்தின் மூலம் சம்பாதித்த பணம் இருந்திருந்தால், ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை பிடித்து வைத்திருக்க முடியும். இன்றைய அரசியலை பார்த்தால், இந்த சகவாசமே வேண்டாம் என்று நினைக்கிறேன். ஏழை மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இன்னும் அரசியலில் இருக்கிறேன்.

எடியூரப்பா முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது, மின்சாரத்துறையில் பெரிய அளவில் ஊழல் நடந்தது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மின்துறை மந்திரியாக இருந்த டி.கே.சிவக்குமாரிடம் வலியுறுத்தினேன். ஆனால் எடியூரப்பாவை காப்பாற்றும் நோக்கத்தில் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு எடியூரப்பா, வருமான வரித்துறைக்கு கடிதம் எழுதி, டி.கே.சிவக்குமார் வீடுகளில் சோதனை நடத்துமாறு கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் அவரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். எடியூரப்பாவை காப்பாற்றியதற்காக டி.கே.சிவக்குமாருக்கு இந்த நிலை வந்துள்ளது.

ஒரு அடி உயரம் தண்ணீர் மட்டுமே இருந்த தொட்டியில் விழுந்து ஒரு பிரபலமான அரசியல்வாதியின் மனைவி இறந்தார். இது சந்தேக மரணம் அல்லவா?. இதுபற்றி யாரும் பேசவில்லை. அத்தகைய அரசியல்வாதி (மறைமுகமாக எடியூரப்பாவை குறிப்பிடுகிறார்) தான் இப்போது கர்நாடகத்தை ஆட்சி செய்கிறார்.

இவ்வாறு குமாரசாமி கூறினார். 
Tags:    

Similar News