செய்திகள்
சரிதா நாயர் - ராகுல் காந்தி

வயநாடு தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு - சரிதாநாயரின் மனுவுக்கு ராகுல்காந்தி பதில்

Published On 2019-09-20 08:41 GMT   |   Update On 2019-09-20 08:41 GMT
வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த சரிதா நாயரின் மனுவுக்கு ராகுல்காந்தி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருவனந்தபுரம்:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். அமேதியில் தோல்வியை தழுவினார்.

ராகுல்காந்தி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் அவரை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் போட்டியிட்டார்.

சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரிதாநாயர், கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது தன்னை ஆட்சியாளர்கள் ஏமாற்றி விட்டதாகவும், அவர்கள் மீது அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

வயநாடு தொகுதியில் சரிதாநாயரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அமேதி தொகுதியில் அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் அமேதி தொகுதியில் அவர் தேர்தலில் போட்டியிட்டார். வயநாடு தொகுதியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து சரிதாநாயர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் அமேதி தொகுதியில் போட்டியிட என்னை அனுமதித்த நிலையில், வயநாடு தொகுதியில் நான் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. எனவே வயநாடு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

சரிதாநாயரின் மனு மீதான விசாரணை கேரள ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இதில் சரிதாநாயரின் மனுவுக்கு நேற்று ராகுல்காந்தி பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் 2 குற்ற வழக்குகளில் தண்டனையும், குற்றவாளி என்றும் அறிவிக்கப்பட்ட சரிதாநாயர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை நிராகரிக்க வேண்டும், ஏற்க கூடாது என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News