செய்திகள்
நிர்மலா சீதாராமன்

உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரி குறைப்பு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Published On 2019-09-20 07:37 GMT   |   Update On 2019-09-20 08:57 GMT
கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரி குறைக்கப்படுவதாக அறிவித்தார்.
பனாஜி:

ஜிஎஸ்டி கவுன்சிலின் 37-வது கூட்டம் கோவா மாநிலத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகள், வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்குப் பிறகு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலீடு மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

உள்நாட்டு நிறுவனங்களுக்கான அனைத்து செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களையும் உள்ளடக்கிய கார்ப்பரேட் வரி 25.17 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இந்த புதிய வரி விகிதமானது நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து கணக்கிடப்படும்.  எந்தவொரு ஊக்கத்தொகையும் சலுகையும் பெறாவிட்டால், உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதம் 22 சதவீதமாக இருக்கும்.

இதேபோல் புதிய நிறுவனங்களுக்கும் வரி குறைக்கப்படுகிறது. புதிய நிறுவனங்கள் 17.01 சதவீதம் மட்டும் கார்ப்பரேட் வரி செலுத்தினால் போதும்.

வருமான வரி சட்டத்தில் ஒரு புதிய திருத்தம் சேர்க்கப்படுகிறது. அதன்படி அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறகு தொடங்கப்படும் புதிய உள்நாட்டு நிறுவனங்களுக்கு, 15 சதவீதத்தில் வருமான வரி செலுத்த ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது

நிதி சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் பெற்று வரும் நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும் வகையில், குறைந்தபட்ச மாற்று வரி எனப்படும் மேட் வரியை தற்போதைய 18.5 சதவீதம் என்ற அளவில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News