செய்திகள்
பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க நகரங்களில் மோடி, டிரம்ப் ஒரே வாரத்தில் 2 முறை சந்திப்பு

Published On 2019-09-19 22:34 GMT   |   Update On 2019-09-19 22:34 GMT
அமெரிக்க நகரங்களில் மோடியும், டிரம்பும் ஒரே வாரத்தில் 2 முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
ஹூஸ்டன்:

அமெரிக்க நகரங்களில் மோடியும், டிரம்பும் ஒரே வாரத்தில் 2 முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். ஹூஸ்டன் நிகழ்ச்சியின்போது டிரம்ப் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 21-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை அமெரிக்காவில் 1 வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஏற்கனவே கடந்த மே மாதம் 30-ந் தேதி மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை ஜப்பானில் ஜூன் மாதம் ஜி-20 உச்சி மாநாட்டின்போதும், கடந்த மாதம் பிரான்சில் ஜி-7 உச்சி மாநாட்டின்போதும் மோடி சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி 22-ந் தேதி ஹூஸ்டன் நகரில் ‘நலமா மோடி?’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி பேசுகிறார். இதில் டிரம்பும் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியின்போது இரு தலைவர்களும் சந்தித்து பேசுகிறார்கள். இது மீண்டும் பிரதமராகியுள்ள நிலையில் பிரதமர் மோடி, டிரம்புடன் நடத்துகிற 3-வது சந்திப்பு.

அது மட்டுமின்றி இரு தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றப்போவது இதுவே முதல் முறை. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே கலிபோர்னியா மாகாணத்துக்கு சென்றிருந்த டிரம்ப், அங்கிருந்து வாஷிங்டனுக்கு நேற்றுமுன்தினம் விமானத்தில் திரும்பியபோது நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், “ ஹூஸ்டன் நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பு ஏதேனும் வெளியிடுவீர்களா?” என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு டிரம்ப் பதில் அளிக்கையில், “வெளியிடலாம். எனக்கும் மோடிக்கும் இடையே நல்லுறவு உள்ளது” என்று கூறினார்.

இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் விரிசல் உள்ளதால், அதை களைகிற விதத்தில் இரு தரப்பும் ஒரு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவை மீண்டும் முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் டிரம்ப் சேர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதற்காக அமெரிக்க எம்.பி.க்கள் அழுத்தம் தருவது முக்கியத்துவம் பெறுகிறது.

ஹூஸ்டன் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கும்போதும் பிரதமர் மோடியும், டிரம்பும் ஒரே வாரத்தில் 2-வது முறையாக சந்தித்து பேச உள்ளனர்.

இந்த சந்திப்பு, மீண்டும் பிரதமரான பின்னர் மோடி, டிரம்புடன் நடத்துகிற 4-வது சந்திப்பாக அமைகிறது. 4 மாதத்தில் 4 முறை இரு தலைவர்களும் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்புகள் இரு தரப்பு பாதுகாப்பு உறவினை மேலும் பலப்படுத்துவதாக அமையும் என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷவர்தன் சிரிங்லா கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News