செய்திகள்
மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரிக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களால் பரபரப்பு

Published On 2019-09-19 16:45 GMT   |   Update On 2019-09-19 16:45 GMT
மேற்கு வங்காளத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவுக்கு மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் துறை மந்திரி பாபுல் சுப்ரியோ வருகை தந்தார்.

அந்த சமயத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழக மாணவர்கள், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து, அங்கிருந்து வெளியேற மறுத்த பாபுல் சுப்ரியோ அந்த மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மாணவர்களில் சிலர் அவரது தலைமுடியை இழுத்தும், கண்ணாடியை தட்டியும் விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாணவ அமைப்பினரால் தான் தாக்கப்பட்டதாக பாபுல் சுப்ரியோ குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், நான் அங்கு அரசியல் செய்ய வரவில்லை. ஆனால், பல்கலைக்கழகத்தில் சில மாணவர்களின் செயல்பாடு எனக்கு வருத்தம் அளிக்கிறது. சிலர் என் தலைமுடியை இழுத்து தாக்கினர் என தெரிவித்தார். 

பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய மந்திரிக்கு மாணவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த தகவல் கிடைத்ததும், அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கார் அங்கு விரைந்து சென்றார். அவர் மந்திரியை மீட்டு தனது காரில் அழைத்துச் சென்றார். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News