செய்திகள்
ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள வாகனங்கள்.

டெல்லியில் வாகனங்கள் ஓடவில்லை- பள்ளி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

Published On 2019-09-19 06:31 GMT   |   Update On 2019-09-19 06:31 GMT
மோட்டார் வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து இன்று டெல்லியில் பெரும்பாலான வாகனங்கள் ஓடவில்லை. இதையடுத்து பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அதிக அபராதம் விதிக்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. சில மாநிலங்களில் மட்டும் வாகன ஓட்டிகளுக்கு அதிக அபராதம் விதிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அதிக அபராதம் விதிக்கும் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் டெல்லியில் விதிகளை மீறும் வாகனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு டெல்லியில் உள்ள வாகன ஓட்டுனர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதிக அபராதம் விதிக்கும் சட்டத்தை மீண்டும் திருத்த வேண்டும் என்று டெல்லியில் உள்ள ஐக்கிய முன்னணி போக்குவரத்து கழகம் கோரிக்கை விடுத்தது.

ஆனால் இந்த கோரிக்கையை மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் ஏற்கவில்லை.


இதையடுத்து மோட்டார் வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து இன்று (வியாழக்கிழமை) வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஐக்கிய முன்னணி போக்குவரத்து கழகம் அறிவித்தது. இந்த போக்குவரத்து கழக அமைப்பில் 41 சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன.

பஸ் போக்குவரத்து, ஆட்டோ, டெம்போ, மேக்சி, டாக்சி ஓட்டுனர்களும் இந்த சங்கங்களில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லியில் இன்று வாகன போக்குவரத்து 90 சதவீதம் குறைந்தது.

வாகன ஸ்டிரைக் காரணமாக அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி- கல்லூரிகளுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். டாக்சி, ஆட்டோ ஓடாததால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் அவதி ஏற்பட்டது.

இதையடுத்து டெல்லியில் பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. சில பள்ளிகளில் இன்று தேர்வுகள் நடப்பதாக இருந்தது. அவை அனைத்தும் 20-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய முன்னணி போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் ஷியாம்லால் கூறுகையில், “கடந்த 15 நாட்களாக நாங்கள் பல தடவை கோரிக்கை விடுத்தும் அரசுகள் கண்டு கொள்ளவில்லை. எனவே தான் இன்று வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது” என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், டெல்லியில் இன்று 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை” என்று தெரிவித்தார். இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய வாகன ஸ்டிரைக் இன்று இரவு 9.35 மணி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 1,704 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 1 லட்சத்து 38 ஆயிரம் வேன்கள் தினசரி மாணவ-மாணவிகளை ஏற்றி செல்கின்றன. 95 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. 90 ஆயிரம் லாரிகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இன்று ஓடவில்லை.
Tags:    

Similar News