செய்திகள்
வீரப்ப மொய்லி

அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு எதிரானது: வீரப்ப மொய்லி

Published On 2019-09-19 02:55 GMT   |   Update On 2019-09-19 02:55 GMT
அமித்ஷாவின் ஒரே நாடு, ஒரே மொழி கருத்து இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறினார்.
புதுடெல்லி

காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான வீரப்ப மொய்லி நிருபர்களிடம் கூறியதாவது:-

‘ஒரே நாடு, ஒரே மொழி’, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ போன்ற உள்துறை மந்திரி அமித்ஷாவின் சமீபத்திய கருத்துகள் இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. அரசியல்சாசனத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகளுக்கும் முரணானது.

இந்தியா போன்ற நாட்டின் உள்துறை மந்திரியாக இருப்பவர் எப்படி இதுபோன்ற கருத்துகளை மக்களின் மனதில் திணிக்க முயலுகிறார். நாட்டின் ஒற்றுமைக்காக இதனை ஒதுக்கிவைக்க வேண்டியது அவசியம். எனவே அமித்ஷா இதுபோன்ற கருத்துகளை திரும்பப்பெற வேண்டும்.



இந்தியாவில் பல அரசியல் கட்சி ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டதாகவும் அமித்ஷா கூறியிருக்கிறார். உண்மையில் பல கட்சி ஜனநாயகம் நாட்டின் ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் சேதமடையாமல் பாதுகாத்து வைத்திருப்பதையும், ஜனநாயகத்தை துடிப்பாக வைத்திருப்பதையும் அவர் மறந்துவிட்டார். இந்தியாவின் ஜனநாயக நிலைத்தன்மை மதசார்பற்ற தன்மையின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பரூக் அப்துல்லா பெரிய தேசபக்தர். லடாக் உள்பட காஷ்மீர் இந்தியாவின் எல்லைக்குள் நீடிப்பதற்கு அவரும், அவரது தந்தையும் காரணம். பரூக் அப்துல்லாவும், பல அரசியல் தலைவர்களும் எப்போதுமே ஜனநாயக பண்பாட்டை சேதமடையாமல் பாதுகாத்து வருகிறார்கள். நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.

இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார். 
Tags:    

Similar News