செய்திகள்
வெற்றி மகிழ்ச்சியில் மாணவர்கள்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர் சங்க தேர்தல் - இடதுசாரி கூட்டணி அபார வெற்றி

Published On 2019-09-17 15:55 GMT   |   Update On 2019-09-17 15:55 GMT
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி கூட்டணி 4 இடங்களையும் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் செப்டம்பர் 6ம் தேதி நடைபெற்றது. இதில், தலைவர், துணைத்தலைவர், செயலாளர், இணைச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடந்தது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் மாணவர் சங்கத்தில் உள்ள 4 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இதற்கிடையே, மாணவர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது எனக்கூறி டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, வெளியிடப்பட்ட மாணவர் சங்க தேர்தல் முடிவுகளின்படி தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளையும் இடதுசாரி கூட்டணி கைப்பற்றியது. 

மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த ஆஷிஷ் கோஷ் தலைவராகவும், ஜனநாயக மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த சாகேத் மூன் துணை தலைவராகவும், அனைத்திந்திய மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த சதீஷ் சந்திர யாதவ் செயலாளராகவும், அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மொகமது டேனிஷ் இணை செயலாளராகவும் வெற்றி பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News