செய்திகள்
2ஜி கோபுரங்கள்

2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்

Published On 2019-09-17 08:46 GMT   |   Update On 2019-09-17 08:46 GMT
2ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இந்த மாதத்துடன் ஓய்வு பெறுவதால் இவ்வழக்கை நீதிபதி அஜய் குமார் தொடர்ந்து விசாரிப்பார் என அறிவிக்கப்படுள்ளது.
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாம் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக அப்போதைய மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய், அறிக்கை அளித்தார்.
இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தியது.

2018-ம் ஆண்டு இந்த வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி ஆகிய அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பில், சிபிஐ-யின் செயல்பாடுகளை நீதிபதி விமர்சித்திருந்தார். சிபிஐ தரப்பில் எந்த விதமான ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார்.



இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ ஏற்கனவே மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு கடந்த மார்ச் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதுவரை பதில் மனுத்தாக்கல் செய்யாத நபர்கள் மனுக்களை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கி நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

இதேபோல், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. பதில் மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, வழக்கை வரும் அக்டோபர் 24-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்துவரும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி இந்த மாதம் ஓய்வு பெறுவதால் 2ஜி வழக்கை இனி  சிபிஐ சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் விசாரிப்பார் என டெல்லி ஐகோர்ட் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News