செய்திகள்
சந்திரபாபு நாயுடு

முன்னாள் சபாநாயகர் தற்கொலை: ஜெகன்மோகன் அரசே காரணம் - சந்திரபாபு நாயுடு

Published On 2019-09-17 05:40 GMT   |   Update On 2019-09-17 07:08 GMT
முன்னாள் சபாநாயகர் தற்கொலைக்கு ஜெகன்மோகன் அரசே காரணம் என்று தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

ஐதராபாத்:

ஆந்திராவில் கடந்த தெலுங்குதேசம் ஆட்சியின் போது சபாநாயகராக இருந்தவர் கோடலா சிவபிரசாத் (72).

தெலுங்குதேச கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் ஐதராபாத்தில் வசித்து வந்தார். நேற்று தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். டாக்டரான இவருக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

என்.டி.ராமராவ் தெலுங்குதேசம் கட்சியை தொடங்கியதில் இருந்து அக்கட்சியில் பணிகளை சிறப்பாக செய்து வந்த இவர் கடந்த 1983-ம் ஆண்டு முதல் 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். என்.டி.ராமராவ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவைகளில் அமைச்சராக பணியாற்றி உள்ளார். சபாநாயகராகவும் இருந்துள்ளார்.

இவர் சபாநாயகராக இருந்தபோது சட்டசபையில் இருந்து ரூ.2 கோடி மதிப்பில் பர்னீச்சர் பொருட்களை தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. புதிதாக ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் அரசு இந்த புகார் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தர விட்டது.

 


அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோடலா சிவபிரசாத் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தநிலையில் அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். கோடலா சிவபிரசாத் மரணத்துக்கு ஜெகன் அரசின் அரசியல் பழிவாங்கலே காரணம் என தெலுங்குதேசம் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

டாக்டர் தொழிலை திறம்பட செய்துவந்த சிவபிரசாத் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதற்கு அரசியல் பழிவாங்கலே முக்கிய காரணம். தேர்தல் சமயத்தில் இருந்து இப்போது வரை அவர் மீது ஆளும் கட்சியினர் பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வந்தனர். இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுகுறித்து பலமுறை என்னிடம் மனமுடைந்து பேசி உள்ளார். நான் அவருக்கு ஆறுதல் கூறி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News