செய்திகள்
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

கிணற்றில் குழந்தையை வீசி கொன்று தாய் தற்கொலை- வரதட்சணை கேட்டு கொடுமை செய்த 3 பேர் கைது

Published On 2019-09-17 05:34 GMT   |   Update On 2019-09-17 05:34 GMT
திருவனந்தபுரம் அருகே வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 3 பேர் கைதாகி உள்ளனர்.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலை கார்க்கிகா பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி. இவருக்கும் தாழக்குடி வெட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆமினா(வயது26) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு மாமனார், மாமியாருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இந்த தம்பதியின் 2 வயது குழந்தை நிரா. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ஆமினாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் முகமதுஅலி, மாமனார் கவுடா, மாமியார் ரம்லா, முகமது அலியின் தங்கை முக்சின் ஆகியோர் கொடுமை செய்து உள்ளனர்.

இதன் பிறகு சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக முகமது அலி சென்று விட்டார். ஆனாலும் ஆமினாவை அவரது மாமனார், மாமியார், கணவரின் சகோதரி ஆகியோர் தொடர்ந்து வரதட்சணைக்காக கொடுமை படுத்தினார்கள்.

இதனால் மனவேதனை அடைந்த ஆமினா தனது குழந்தையை வீட்டில் உள்ள கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

வரதட்சணை கொடுமை காரணமாகவே இந்த சம்பவம் நடந்ததாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆமினாவின் தந்தை போலீசில் புகார் செய்தார்.

இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆமினா தற்கொலை வழக்கில் தற்போது அவரது மாமனார் கவுடா, மாமியார் ரம்லா மற்றும் முக்சின் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

ஆமினாவின் கணவர் முகமது அலி தற்போது சவுதி அரேபியாவில் உள்ளதால் அவரை கேரளாவுக்கு வரவழைத்து விசாரணை நடத்தவும் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News