செய்திகள்
பட்டாம்பூச்சி பறக்கவிட்ட பிரதமர் மோடி

சர்தார் சரோவர் அணை பகுதியில் பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி...

Published On 2019-09-17 04:53 GMT   |   Update On 2019-09-17 04:53 GMT
குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை பகுதியில் இன்று பிரதமர் மோடி, பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்தார்.
நர்மதா:

பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த தினமான இன்று வழக்கம் போல், சொந்த மாநிலமான குஜராத் சென்று, தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து ஆசி பெற்றார்.

இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்றார். இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால், குஜராத் மாநிலத்தின் நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 138.68 மீட்டர் ஆகும். இதில், கடந்த சனிக்கிழமையே நீர்மட்டம் 138 மீட்டரை எட்டி விட்டது.

இன்னும் 68 செ.மீ. நீர்மட்டம் உயர்ந்தால், அணை நிரம்பி வழியத் தொடங்கி விடும். விரைவில், முழு அளவான 138.68 மீட்டர் உயரத்தை நீர்மட்டம் எட்டி விடும் என கூறப்பட்டது.



இந்த சாதனையை காண பிரதமர் மோடி இன்று வருகை தந்தார். அங்கு இருந்த  'Statue of Unity' சர்தார் வல்லபாய் படேல் உருவ சிலையை பார்வையிட்டு, தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டார். இதனையடுத்து நர்மதா நதியின் சர்தார் சரோவர் அணையை  இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.



மேலும் பிரதமர் மோடி, நர்மதா மாவட்டத்தில் உள்ள கல்வானி சுற்றுச்சூழல் பகுதியினை பார்வையிட்டார்.  இதனையடுத்து நர்மதா மாவட்டம், கேவடியாவில் உள்ள ஜங்கிள் சபாரி சுற்றுலா பூங்காவில் மின் வாகனத்தில் பயணம் செய்து விலங்குகளை பார்வையிட்டார்.



பின்னர் சர்தார் சரோவர் அணை பகுதியில் இருந்த பட்டாம்பூச்சி பூங்காவில் பல வண்ண பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு பிரதமர் மோடி மகிழ்ந்தார்.

முன்னதாக, பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கேவடியா அணை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

Similar News