செய்திகள்
சித்தராமையா

நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவதை சிலர் சதி செய்து தடுத்தனர்: சித்தராமையா

Published On 2019-09-17 02:14 GMT   |   Update On 2019-09-17 02:14 GMT
எனக்கு மீண்டும் முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவதை சிலர் சதி செய்து தடுத்து விட்டனர் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
கொள்ளேகால் :

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் ஸ்ரீபீரேஸ்வரா சமுதாய பவனம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு சமுதாய பவனம் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சித்தராமையா பேசுகையில் கூறியதாவது:-

நான் முதல்-மந்திரியாக இருந்த போது ஸ்ரீபீரேஸ்வரா சமுதாய பவனம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கி இருந்தேன். தற்போது இந்த பவனத்தை கட்டி முடிக்க கூடுதலாக ரூ.1½ கோடி தேவைப்படுகிறது. நான் முதல்-மந்திரியாக இருந்தால் அந்த பணத்தை உடனடியாக விடுவித்து இருப்பேன். ஆனால் இந்த அரசு கூடுதல் நிதியை ஒதுக்குமா என்று தெரியவில்லை.

மேலும் எனது ஆட்சியில் எல்லா சமுதாய மக்களுக்காக சமுதாய பவனை கட்டி கொடுத்தேன். கடந்த ஆண்டு(2018) நடந்த தேர்தலின் போது நான் மீண்டும் வெற்றி பெற்று முதல்-மந்திரி ஆவேன் என்று நினைத்து இருந்தேன்.

ஆனால் எனது சொந்த தொகுதியான சாமுண்டீஸ்வரியில் நான் தோற்கடிக்கப்பட்டேன். நான் தோற்றதற்கான காரணம் என்ன என்பது எனக்கு இன்று வரை தெரியவில்லை. அந்த தோல்விக்காக நான் வருத்தம் அடைந்தேன்.

மக்கள் பயன்பெறும் வகையில் ஷீரபாக்யா, அன்னபாக்யா உள்பட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினேன். மீண்டும் முதல்-மந்திரி ஆனால் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அது நடக்காமல் போய் விட்டது. இருப்பினும் எனக்கு மீண்டும் முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவதை சிலர் சதி செய்து தடுத்து விட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News