செய்திகள்
மாறுவேடத்தில் ஜெயேஷ் படேல்

32 வயது வாலிபர் 81 வயது முதியவராக மாற காரணமானவர் கைது

Published On 2019-09-16 17:40 GMT   |   Update On 2019-09-16 17:40 GMT
டெல்லி விமான நிலையத்தில் 81 வயது முதியவரைப்போல வேடமிட்டு நியூயார்க் செல்ல நினைத்த வாலிபர் விமான நிலையத்தில் வசமாக சிக்கியதையடுத்து அவருக்கு மாறுவேடம் அணிய உதவிய சிகை அலங்கார நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புது டெல்லி:

அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் படேல்(32).  இவர் நியூயார்க் பயணிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால், அம்ரிக் சிங் எனும் 81 வயது முதியவர் பெயரில் பாஸ்போர்ட் ஒன்றை போலியாக ஏற்பாடு செய்துள்ளார். 

இதையடுத்து தாடி, தலைமுடி என அனைத்தையும் 81 வயது முதியவர் போல தோற்றம் தெரிய வேண்டுமென வெள்ளை நிற டை அடித்துக் கொண்டார். மேலும் அவர் நியூயார்க் செல்வதற்காக கடந்த 10-ம் தேதி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு  வீல் சேரில் வந்துள்ளார். 

இவரது நடத்தையில் ஆரம்பத்தில் இருந்தே அங்கு சிறப்பு பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரை சோதித்தனர். அதில், அவர் 32 வயதுடைய வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது. 



இதையடுத்து அவரை கைது செய்த பாதுகாப்பு படையினர் அவரை குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லியை சேர்ந்த ஷம்ஷிர் சிங் என்ற சிகை அலங்கார நிபுணர் மாறுவேடம் அணிய உதவி செய்தது தெரியவந்தது.

இந்நிலையில், ஜெயேஷ் படேலுக்கு 81 வயது முதியவர் போன்று மாறுவேடம் அணிய உதவி செய்த ஷம்ஷிர் சிங்கை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News