செய்திகள்
எடியூரப்பா

10 முறை முயற்சி செய்தும் மோடியை சந்திக்க முடியாமல் எடியூரப்பா திணறல்

Published On 2019-09-16 06:21 GMT   |   Update On 2019-09-16 06:21 GMT
10 முறை முயற்சி செய்தும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முடியாததால் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அதிருப்தியில் உள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக முதல்- மந்திரியாக பா.ஜனதாவை சேர்ந்த எடியூரப்பா இருந்து வருகிறார். 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு பதவி இல்லை என்ற கோட்பாட்டை பா.ஜனதா மேலிடம் கடைபிடித்து வருகிறது.

எடியூரப்பாவிற்கு 76 வயது ஆகிறது. என்றாலும் கர்நாடகாவில் முதன் முதலில் பா.ஜனதா ஆட்சி உருவாக காரணமாக இருந்தவர் என்ற காரணத்தால் அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு நீண்ட யோசனைக்கு பின்னர் தான் பா.ஜனதா மேலிடம் அவரை முதல்-மந்திரி ஆக்கியது.

ஆனால் தற்போது வரை எடியூரப்பாவின் கோரிக்கைகள் எதையும் மத்திய அரசு ஏற்கவில்லை.

மந்திரி சபையை சொந்தமாக அமைக்க அவரால் முடியவில்லை. மேலிடம் அறிவித்த பட்டியல்படியே மந்திரிகளை நியமிக்க முடிந்தது. அதேபோல இலாகா ஒதுக்குவதிலும் மேலிடம் தலையிட்டது. எடியூரப்பா ஆதரவாளர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்க மேலிடம் தடை போட்டது.

துணை முதல்-மந்திரி பதவிக்கு எடியூரப்பா சிபாரிசு செய்த நபர்களை நியமிக்காமல், கோவிந்த்கார் ஜோல், அஸ்வத் நாராயணா, லட்சுமண் சவதி ஆகிய 3 பேரை துணை முதல்- மந்திரிகளாக மேலிடம் நியமித்தது.

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக அரவிந்த் லிம்பாவளியை நியமிக்க வேண்டும் என்று எடியூரப்பா மேலிடத்திற்கு பரிந்துரை செய்தார். ஆனால் அவரை நியமிக்காமல் நளின்குமார்கட்டீலை பா.ஜனதா தலைவராக மேலிடம் நியமித்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசுமாறு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை, எடியூரப்பா கேட்டுக் கொண்டார். அவர்களை சந்திக்க அமித்ஷா மறுத்து விட்டார். மேலும் 17 பேரும் மந்திரி பதவி கேட்டு எடியூரப்பாவிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்பது எடியூரப்பாவுக்கு தெரியவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கை காரணம் காட்டி அவர்களை சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை.

தற்போதைய நிலையில் எடியூரப்பா எந்த அதிகாரமும் இல்லாத முதல்-மந்திரியாக தான் உள்ளார். ஆட்சியிலும், கட்சியிலும் அவரது அதிகாரங்களை பா.ஜனதா மேலிடம் குறைத்துவிட்டது.

கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கர்நாடக வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடுமையான மழை பெய்து 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தவித்தன. 87 பேர் உயிரிழந்தனர். 7 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்.

கர்நாடக அரசு மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில் ரூ. 30 ஆயிரம் கோடி அளவிற்கு பொருள் சேதம் ஏற்பட்டதாக எடியூரப்பா கூறி இருந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு ரூ. 309 கோடியை விடுவித்தது. ஆனால் மத்திய அரசு இதுவரை நிதிஉதவி வழங்கவில்லை. அமித்ஷா நேரில் வந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு சென்றார். உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், வீடு சேதம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் எடியூரப்பா அறிவித்தார். ஆனால் அதையும் வழங்க முடியவில்லை. முதற்கட்டமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 10 ஆயிரம் மட்டும் வழங்கினார்.

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குமாறு, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து எடியூரப்பா முறையிட்டார்.



கடந்த 10 நாட்களில் மட்டும் வெள்ள நிவாரண உதவி கேட்டு 10 முறை பிரதமரை சந்திக்க முயற்சித்தும் எடியூரப்பாவால் முடியவில்லை. இதை காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளது.

குறிப்பாக எடியூரப்பாவை காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கடுமையாக விமர்சனம் செய்தார். வெள்ள நிவாரண நிதி வழங்காததை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

காங்கிரசின் விமர்சனங்களை தாங்க முடியாமல் எடியூரப்பா தவித்து வருகிறார். கட்சியிலும், ஆட்சியிலும் தனது செல்வாக்கை எடியூரப்பாவால் நிலைநிறுத்த முடியவில்லை. அவருக்கு எதிர்ப்பாளர்கள் அதிகமாக உருவாகிவிட்டார்கள்.

தனது ஆளுமையை தடுக்க காரணமாக உள்ள பா.ஜனதா மேலிட தலைவர்கள் மீது எடியூரப்பா அதிருப்தியில் உள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை சரியாக வழங்காததால் எடியூரப்பாவை கண்டித்து வட கர்நாடக மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர். 3 மாதங்களில் மாறுபட்ட ஆட்சியை வழங்குவதாக அறிவித்த எடியூரப்பாவால் அவ்வாறு செய்ய முடியவில்லை. மக்களின் கோரிக்கைகளையும் அவரால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அவர் மக்கள் செல்வாக்கை இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
Tags:    

Similar News