செய்திகள்
பிரதமர் மோடி

சர்தார் சரோவர் அணை நிரம்பி வழிவதை மோடி பார்வையிடுகிறார் - நாளை குஜராத் பயணம்

Published On 2019-09-16 00:01 GMT   |   Update On 2019-09-16 00:01 GMT
தனது பிறந்தநாளான நாளை, சர்தார் சரோவர் அணை முழு கொள்ளளவை எட்டுவதை பிரதமர் மோடி பார்க்கிறார்.
ஆமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்ட 1961-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு அடிக்கல் நாட்டினார். பல்வேறு தடங்கல்களுக்கு பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் அணை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், அணையில் பாதியளவு தண்ணீர் மட்டுமே இருந்தது.

ஆனால், இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.



அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 138.68 மீட்டர் ஆகும். இதில், கடந்த சனிக்கிழமையே நீர்மட்டம் 138 மீட்டரை எட்டி விட்டது. இன்னும் 68 செ.மீ. நீர்மட்டம் உயர்ந்தால், அணை நிரம்பி வழியத் தொடங்கி விடும்.

விரைவில், முழு அளவான 138.68 மீட்டர் உயரத்தை நீர்மட்டம் எட்டி விடும் என்று குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி தெரிவித்தார். இந்த சாதனையை பிரதமர் மோடி நேரில் பார்க்க உள்ளதாகவும் அவர் கூறினார். இதற்காக மோடி நாளை குஜராத் செல்கிறார். பிறந்தநாளையொட்டி அவர் தனது தாயாரையும் சந்திப்பார் என்று தெரிகிறது.

இதுகுறித்து விஜய் ரூபானி மேலும் கூறியதாவது:-

பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17- தேதி (நாளை) பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளில், அவர் சர்தார் சரோவர் அணை முழு கொள்ளளவை எட்டும் சாதனையை நேரில் பார்த்து மகிழ்கிறார்.

இந்த அணை நீர், குஜராத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது. நர்மதை ஆற்றின் குறுக்கே அணை உருவாக வேண்டும் என்ற சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சர்தார் சரோவர் அணை தண்ணீர், 131 நகர்ப்புற மையங்கள் மற்றும் 9 ஆயிரத்து 633 கிராமங்களின் குடிநீர் தேவைக்கும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர்ப்பாசன தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
Tags:    

Similar News