செய்திகள்
அமித் ஷா

இந்தியாவின் ஒரே மொழி இந்தி - அமித் ஷா கருத்துக்கு முக்கிய தலைவர்கள் எதிர்ப்பு

Published On 2019-09-15 06:29 GMT   |   Update On 2019-09-15 06:29 GMT
இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் கருத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

புதுடெல்லி:

இந்தி மொழி தினத்தையொட்டி மத்திய உள்துறை மந்திரியும், பாரதிய ஜனதா தேசிய தலைவருமான அமித் ஷா வாழ்த்து செய்தி வெளியிட்டு இருந்தார்.

அதில், இந்தி நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும். இந்தியால் தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும். இந்தியை வைத்துதான் வெளி நாடுகளில் இந்தியாவை அடையாளம் காண முடியும் என்று கூறி இருந்தார்.

அவருடைய கருத்துக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

 


 

அமித் ஷா தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட வேண்டி இருக்கும் என்றும் தலைவர்கள் கூறி இருந்தனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் தென்மாநிலம் முழுவதும் அமித் ஷாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கர்நாடகாவில் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:-

எந்த மொழியையும் மற்ற மொழிகள் பேசுபவர்கள் மீது திணிப்பது தவறானது. நாங்கள் இந்திக்கு எதிரி அல்ல. ஆனால், மற்ற மொழிகள் பேசும் மக்களிடம் இந்தியை திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்.

இந்திதான் நாட்டின் தேசிய மொழி என்ற தவறான தகவலை பரப்ப வேண்டாம். கன்னடம் உள்ளிட்ட 22 மொழிகள் தேசிய அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதில், இந்தியும் ஒன்று.

இதில் ஒரு மொழியை மட்டும் முன்னிலைப்படுத்துவது, தவறான தகவல்களை பரப்புவது போன்றவற்றை செய்யக்கூடாது. இது, ஒருவருக்கொருவர் மொழி ரீதியாக விட்டுக் கொடுத்து செயல்படுவதை பாதிக்கும்.

மொழி என்பது ஒரு வி‌ஷயத்தை தெரிந்து கொள்ளும் ஜன்னல் ஆகும். மொழி மீது அன்பு செலுத்தி அதை வளர்க்கலாம். ஆனால், ஒரு போதும் திணிக்க கூடாது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

 


 

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறும்போது, இந்திய அலுவல் மொழியாக 22 மொழிகள் இருக்கும்போது ஏன் இந்திக்கு மட்டும் விழா எடுத்து இந்தி திவாஸ் விழா கொண்டாட வேண்டும்? மற்ற மொழிகளுக்கும் ஏன் விழா நடத்தக்கூடாது?

இந்திய கூட்டாட்சியில் கன்னடர்களும் இடம்பெற்று இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். அப்படி இருக்க, கன்னடத்துக்கு ஏன் விழா எடுக்க வில்லை? என்று கூறினார்.

கன்னட வேதிகா அமைப்பு அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதுடன் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளது.

ஐதராபாத் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி கூறும்போது, இந்தி என்பது இந்திய மக்கள் அனைவருடைய தாய்மொழி கிடையாது. இந்த மண்ணில் பல அழகான மொழிகள் தாய் மொழிகளாக இருக்கின்றன.

அதன் பன்முகத்தன்மையை சிதைக்க முயற்சிக்க கூடாது. இந்திய அரசியல் சாசன சட்டம் 29 அனைத்து மொழிகளையும், கலாச்சாரத்தையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. அதை மறந்து விட வேண்டாம் என்று கூறினார்.

கேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கொடியேரி பால கிருஷ்ணன் கூறும்போது, இந்திய நாடு செயல்பாடுகள் ரீதியாக பல்வேறு பன்முகத்தன்மை கொண்டது. இதை சிதைக்க முயற்சித்தால் தேசிய ஒருங்கிணைப்புக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

பாரதிய ஜனதா தனது செல்வாக்கை இந்தி பேசும் மாநிலங்களில் நிலை நிறுத்த முடிந்துள்ளது. பிராந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம் மொழி பேசும் பகுதிகளில் அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

எனவே, இந்த பகுதிகளை குறிவைக்கிறார்கள். இந்தியாவின் உயர் கலாச்சாரத்தையும், பன்முகத்தன்மையையும் அழிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை ஆகும். அதை செயல்படுத்தும் விதமாக அமித் ஷா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என்று கூறினார்.

கேரள காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் கூறும் போது,அமித் ஷாவின் கருத்து ஆபத்தை ஏற்படுத்தி விடும். இந்தியா பல மொழிகளை பேசும் மக்களை கொண்டது.

அவ்வாறு இருக்க, இந்தியை அனைத்து மொழி மக்களிடமும் திணிப்பது மக்களை துண்டாடி விடும். ஒவ்வொரு மொழியும் தங்களுக்கு என தனி அடையாளங்களையும், வளங்களையும் கொண்டு இருக்கிறது. அதை அரசியல் சட்டம் காப்பாற்றுகிறது. இதை சிதைக்க முயற்சிக்க வேண்டாம் என்று கூறினார்.

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும், கலாச்சாரத்துக்கும் மக்கள் மரியாதை அளிக்க வேண்டும்.

அதே நேரத்தில் தாய் மொழியை அழித்து விட்டு மற்ற மொழிகளை உயர்த்தக்கூடாது. அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதையை அளிக்க வேண்டும். நாம் பல மொழிகளை கற்றுக்கொள்ளலாம். ஆனால், தாய்மொழியை எப்போதும் மறக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறும்போது, இந்தி மொழி அலுவல் மொழி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அத்துடன் சேர்ந்து 22 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன.

அரசியல் சட்டம் இயற்றப்பட்ட போதே மும்மொழி கொள்கை பற்றி விவாதிக்கப்பட்டது. அந்த பிரச்சினைக்கு தெளிவான தீர்வை நேரு உள்ளிட்ட தலைவர்கள் எடுத்துவிட்டார்கள்.

மொழி சம்பந்தப்பட்ட உணர்வுப்பூர்வமான வி‌ஷயங்களை மீண்டும் பேசி சர்ச்சையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

3 மொழி கொள்கை குறித்து தற்போது பேசி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம். நானும் இந்தி பேசுகிறவன்தான். ஆனால், நாட்டில் உள்ள அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன் என்று ஆனந்த் சர்மா கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில், அமித் ஷா தெரிவித்த கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. இது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையை பரப்புவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. அதனால் தான் இப்படி சொல்லி இருக்கிறார்கள்.

இந்தி திணிப்பை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த கொள்கை நமது நாட்டை துண்டாக்கி விடும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News