செய்திகள்
ராஜ்நாத் சிங்

பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தான் தானாகவே துண்டுகளாக சிதறும் - ராஜ்நாத் சிங்

Published On 2019-09-15 02:29 GMT   |   Update On 2019-09-15 02:29 GMT
அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பாகிஸ்தானியர் யாரும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் செல்ல வேண்டாம் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தன் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில், தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்தால் இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை திரும்பி வர அனுமதிக்க மாட்டார்கள் என எச்சரித்துள்ளார்.

சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் சிறுபான்மையினரின் மக்கள்தொகை அதிகரித்துள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தார்கள், பாதுகாப்புடன் இருந்து வருகின்றனர், இனியும் பாதுகாப்பாக இருப்பார்கள். 

இந்தியா மக்களை ஜாதி, மத அடிப்படையில் பிரிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற சூழ்நிலை தொடர்ந்தால் பாகிஸ்தானை பிளவுபடுத்த யாரும் தேவையில்லை, அது தானாகவே துண்டு துண்டுகளாக சிதறிவிடும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News