செய்திகள்
கோப்பு படம்

விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு மங்குகிறது - இஸ்ரோ மூத்த அதிகாரி தகவல்

Published On 2019-09-14 01:41 GMT   |   Update On 2019-09-14 01:44 GMT
விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு படிப்படியாக கடினமாகி வருவதாக இஸ்ரோ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

நிலவின் தென் துருவப்பகுதியில், கடந்த 7-ந் தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கி வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலவுக்கு 2.1 கி.மீ. அருகே வந்தபோது அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

இருப்பினும் விக்ரம் லேண்டர், தரை இறங்கி இருக்க வேண்டிய இடத்தில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் விழுந்து கிடப்பது தெரிய வந்தது. இதை சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் தெர்மல் படம் எடுத்து அனுப்பியது.

அதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியை பெங்களூரு அருகே அமைந்துள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசாவும் தொடர்ந்து ரேடியோ சிக்னல்களை அனுப்பி வருகிறது.

விக்ரம் லேண்டர் மற்றும் அதனுள் இருக்கிற பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் ஆயுள்காலம் 14 நாட்கள்தான். ஏற்கனவே இன்றுடன் 8 நாட்கள் முடிகிறது. இன்னும் 6 நாட்கள்தான் மீதி உள்ளன. அதற்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு மங்கிப்போய் விட்டது.

இதை இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வது படிப்படியாக கடினமாகி வருகிறது. ஒவ்வொரு மணி நேரத்திலும் அதன் பேட்டரி சக்தியை இழந்து வருகிறது. அது இயங்குவதற்கு சக்தி இல்லாமல் போய்விடும். கடந்து செல்கிற ஒவ்வொரு நிமிடமும், நிலைமை மோசமாகத்தான் ஆகிறது. எனவே விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு மிக மிக குறைந்து விட்டது” என தெரிவித்தார்.
Tags:    

Similar News