செய்திகள்
மன்மோகன் சிங்

மோசம் என்ற நிலையில் இருந்து மிக மோசம் என்ற நிலைக்கு செல்கிறது இந்திய பொருளாதாரம்: மன்மோகன் சிங்

Published On 2019-09-12 17:46 GMT   |   Update On 2019-09-12 17:46 GMT
இந்திய பொருளாதாரம் மோசம் என்ற நிலையில் இருந்து மிகவும் மோசம் என்ற நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 7 வருடங்களில் முதல்முறையாக இந்த அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்பட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கிவருகிறது. மேலும், இதனால் பலர் வேலையை இழக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் கூறியதாவது:

''பொருளாதாரத்தை முன்னேற்றுவோம் எனக்கூறி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக அரசு முற்றிலும் புறக்கணித்துவிட்டது. இந்திய பொருளாதாரம் தற்போது தலைகீழான நிலையில் உள்ளது. மேலும் அது மோசம் என்ற நிலையில் இருந்து மிகவும் மோசம் என்ற நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. 



ரியல் எஸ்டேட் துறையில் நாட்டின் முக்கிய நகரங்களில் 4.5 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது. ஆனால் அதை வாங்க ஆட்கள் இல்லை. ஏனென்றால், யாருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை. பொருளாதார மந்தநிலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சிகள் எடுக்கவேண்டும். 

நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை குறித்த தகவல்களை காங்கிரஸ் பொதுமக்களின் பார்வைக்கு நிச்சயம் கொண்டுசெல்லும்”. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News