செய்திகள்
ப.சிதம்பரம்

நீதிமன்றக் காவலை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் சிதம்பரம்

Published On 2019-09-12 06:38 GMT   |   Update On 2019-09-12 06:38 GMT
நீதிமன்றக் காவல் தொடர்பாக விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் திரும்ப பெற்றார்.
புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 19-ம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இதேபோல், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.



இந்த இரு மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரரின் மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே செப்டம்பர் 19-ம்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் திரும்ப பெற்றார். 
Tags:    

Similar News