செய்திகள்
மம்தா பானர்ஜி

மத்திய அரசின் புதிய வாகன சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் : மம்தா திட்டவட்டம்

Published On 2019-09-11 13:59 GMT   |   Update On 2019-09-11 13:59 GMT
மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கிலும், விதிமுறைகளை வாகன  ஓட்டிகள் சரியாக கடைபிடிக்கும் நோக்கிலும் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்தது. சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை பல மடங்கு உயர்த்த இந்த புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது.

இந்த சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த அபராத உயர்வுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது.



இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ''திருத்தியமைக்கப்பட்ட வாகனச்சட்டத்தை நடைமுறை படுத்தினால் பொதுமக்களின் மீது அதிக சுமையை வைப்பது போல் ஆகிவிடும் என எங்கள் மாநிலத்தின் அரசு அதிகாரிகள் கருதுவதால் இதை இங்கு அமல்படுத்தமாட்டோம்.” என தெரிவித்தார்.

திருத்தியமைக்கப்பட்ட அபராதங்களை அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி இன்று அறிவித்துள்ள நிலையில் மம்தா பானர்ஜி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News