செய்திகள்
நிதின் கட்காரி

போக்குவரத்து விதிமீறல் அபராதம் பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் -நிதின் கட்காரி

Published On 2019-09-11 08:47 GMT   |   Update On 2019-09-11 08:47 GMT
போக்குவரத்து விதிமீறலில் கடுமையான அபராதம் விதிக்கப்படும் விவகாரத்தில் மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
புது டெல்லி:

போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்குவதுடன், விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி நிறைவேற்றப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் கடுமையான முறையில் நாடு முழுவதும் இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மோட்டார் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கு காரணமானவருக்கு ரூ.5 லட்சம் வரையும், படுகாயம் ஏற்படுத்தினால் ரூ.2½ லட்சம் வரையும் அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.



லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரமும், லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட பின்னரும் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரமும் அபராதமும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.5 ஆயிரம் என அதிகபட்ச அபராதம் விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.

இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து விதிமீறல் அபராதம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி, ‘போக்குவரத்து விதிமீறல்களால் விதிக்கப்படும் அபராத தொகையினை குறைப்பது பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம்’ என கூறியுள்ளார்.
Tags:    

Similar News