செய்திகள்
ஒருநாள் போலீஸ் கமிஷனர்கள்

உயிருக்கு போராடும் 5 சிறுவர்களுக்கு ஒருநாள் போலீஸ் கமிஷனர் பதவி

Published On 2019-09-09 09:27 GMT   |   Update On 2019-09-09 10:34 GMT
கொடிய நோய்களுக்குள்ளாகி ஆயுள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் 5 சிறுவர்-சிறுமியர் பெங்களூரு நகரில் இன்று ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக பதவியேற்றனர்.
பெங்களூரு:

கொடிய நோய்களுக்குள்ளாகி ஆயுள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் 5 சிறுவர்-சிறுமியர் பெங்களூரு நகரில் இன்று ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக பதவியேற்றனர்.

சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பெருநகரங்களில் ‘மேக் எ விஷ்’ என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அடைய இயலாத இடங்களில் இருந்துகொண்டு நிறைவேற முடியாத ஆசையுடன் வாழும் மக்களின் கனவுகளை ஓரளவுக்காவது நிறைவேற்றி வைப்பது இந்த தொண்டு நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

அவ்வகையில், கொடிய நோய்களுக்குள்ளாகி ஆயுள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் 5 சிறார்களுக்கு  பெங்களூரு நகரில் ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக பதவியேற்க இந்த  ‘மேக் எ விஷ்’ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்தது.

இதைதொடர்ந்து, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு நகரில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ், ழுழு சீருடையுடன் அவர்கள் 5 பேரையும் ஒருநாள் கமிஷனராக தனது நாற்காலியில் இன்று அமர வைத்து அழகு பார்த்தார்.




இவர்களில் விஜயப்புரா அருகேயுள்ள பிஜப்பூர் பகுதியை சேர்ந்த முஹம்மது சாஹிப் என்ற 11 வயது சிறுவன் ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவன். ஹசன் மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ருட்டன் குமார் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று முற்றிலுமாக செயலிழந்த நிலையில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு மட்டுமே இயங்கும் மற்றொரு சிறுநீரகத்தின் உதவியால் உயிர் வாழ்ந்து வருகிறான்.

ஆந்திராவை சேர்ந்த ஷிரனானி பட்டாலா(8) தலசெமியா நோயாலும் பெங்களூருவை சேர்ந்த அர்ஷத் பாஷா(8) கொடிய உயிர்க்கொல்லி நோயாலும் பாதிக்கப்பட்டவர்கள். பெங்களூருவை சேர்ந்த 4 வயது சிறுவனான சையத் இமாம் ரத்த அழுத்தம் மற்றும் அரியவகை தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மிக சிறியவயது குழந்தைகளான இவர்கள் அனைவருமே மிக தீவிரமான நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் பெற்றோரை ஒருநாளாவது மகிழ்விக்க வேண்டும் என விரும்பினேன்’ என்று
நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ்.
Tags:    

Similar News