செய்திகள்
பசு கோமியத்தை சேகரிக்கும் வடமாநிலத்து பெண் (கோப்பு படம்)

புற்றுநோய் சிகிச்சைக்கு பசு கோமியம் - மத்திய மந்திரி தகவல்

Published On 2019-09-08 13:51 GMT   |   Update On 2019-09-08 13:51 GMT
புற்றுநோய் சிகிச்சை மற்றும் பிறநோய்களுக்கான மருந்து தயாரிப்பில் பசு மாட்டின் கோமியத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மந்திரி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

நோய்க்கிருமிகளை கொல்வதில் பசு மாட்டின் கோமியத்துக்கு தனிச்சிறப்பு உள்ளதாக இந்திய மக்கள் கருதி வருகின்றனர். குறிப்பாக, பல ஆண்டுகாலமாக காலையில் பசுவின் கோமியத்தால் முகம் கழுவதை ஆன்மிகம்சார்ந்த நற்காரியங்களில் ஒன்றாக இந்து மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சை மற்றும் பிறநோய்களுக்கான மருந்து தயாரிப்பில் பசு மாட்டின் கோமியத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி அஷ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்.



கோயமுத்தூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஷ்வினி குமார் சவுபே, ‘பல வகையான மருந்துகள் தயாரிப்பில் பசுவின் கோமியம் பயன்படுத்தப்படு வருகிறது. புற்றுநோய் போன்ற குணப்படுத்தவே இயலாத நோய்களுக்கான சிகிச்சையிலும் தனிப்பட்ட ரகத்தை சேர்ந்த பசுக்களின் கோமியம் பயன்படுத்தப்படுகிறது. இதை மேலும் விரிவுப்படுத்துவது தொடர்பாக  மத்திய சுகாதாரத்துறையின் ஆயுஷ் அமைச்சகம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது’ என குறிப்பிட்டார்.

பல வேளைகளில் தங்களது நோய் குணமாவதற்காக மக்கள் பசுவின் கோமிடத்தை குடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். நமது முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் கூட இதை வழக்கமாக கொண்டிருந்தார். எனவே, பசுவின் கோமியம் தொடர்பாக அதிகமான ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் பாஜக பெண் எம்.பி. சாத்வி பிராக்யா சிங் தாக்குர், ‘மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நான் பசுவின் கோமியம் கலந்த மூலிகை மருந்தை சாப்பிட்டு குணமடைந்தேன்’ என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News