செய்திகள்
ப சிதம்பரம்

திகார் சிறையில் தூக்கமின்றி தவித்த ப.சிதம்பரம்

Published On 2019-09-07 03:47 GMT   |   Update On 2019-09-07 03:47 GMT
திகார் சிறையில் சரியான தூக்கமின்றி தவித்தவாறுதான் ப.சிதம்பரம் இரவைக் கழித்ததாக சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.
டெல்லி திகார் சிறை வளாகத்தில் சிறை எண். 7-ல் 73 வயது ப.சிதம்பரம்!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தொடங்கி பல அரசியல் பிரபலங்கள் அடைக்கப்பட்டிருந்த டெல்லி திகார் சிறைக்கு என்று பல சரித்திரங்கள் உண்டு.

ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது இந்திரா காந்தியை கைது செய்து இதே திகார் சிறையில்தான் அடைத்தது.

அப்போது திகார் சிறையில் கைதிகள் நடத்தப்படுகிற விதம், அங்கேயுள்ள நிர்வாக சீர்கேடுகள் எல்லாவற்றையும் நேருக்கு நேர் பார்த்தார் இந்திரா காந்தி. அவரை பல பெண் கைதிகள் சந்தித்து, அந்த சிறையின் உண்மை நிலையை அவரிடம் போட்டு உடைத்தனர். எல்லாவற்றையும் இதயத்தில் பதிவு செய்து கொண்டார் இந்திரா காந்தி.



1980-ம் ஆண்டு, இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, நீதிபதி ஏ.என். முல்லா தலைமையில் சிறை சீர்திருத்தக்குழு அமைத்தார். அன்றைய உள்துறை மந்திரி ஜெயில் சிங்கையும் திகார் சிறையை கண்டு வரச்செய்தார்.

சிறை சீர்திருத்தக்குழு பல்வேறு பரிந்துரைகளை செய்தது. இந்தக் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தி, திகார் சிறையை நாட்டின் தலைசிறந்த கட்டமைப்பு கொண்ட சிறையாக மாற்றினார்கள்.

அதன்பின்னர் அந்த சிறையில் தலைமைப் பொறுப்பில் இருந்த இன்றைய புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, சிறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வந்து அதை ஆசிரமம் என்று சொல்லத்தக்க விதத்தில் ஆக்கினார்.

அந்த சிறையில்தான் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைதான ப. சிதம்பரம் சிறை எண். 7-ல் அடைக்கப்பட்டிருக்கிறார். திகார் சிறைவாசத்தை தவிர்த்து விட எத்தனையோ முயற்சிகளை சிறந்த சட்ட வல்லுனர்களான மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி போன்றோரையெல்லாம் கொண்டு வந்து வாதாட வைத்தும் விதி வலியது என்பது ப.சிதம்பரம் விஷயத்தில் நிரூபணமாகி விட்டது.

ப.சிதம்பரத்தை வரும் 19-ந் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்து டெல்லி ரோஸ் அவினியூ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய் குமார் குஹர் அதிரடியாய் உத்தரவு போட்டார்.

அதைத் தொடர்ந்து சாணக்கியபுரியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள திகார் சிறைக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டார். அது 35 நிமிட நேர பயணம்.

டெல்லி திகார் சிறையில் 4-ம் எண் வாயில் வழியாக அழைத்துச்செல்லப்பட்டு, அங்கு சிறை எண். 7-ல் அடைக்கப்பட்டார். சுமார் 600, 700 கைதிகளுடன் ஒரு கைதியாக ப. சிதம்பரம்.

இங்கு பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் அடைக்கப்படுகிறார்கள் என்பது ஸ்பெஷல். அந்த வகையில் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் கடந்த ஆண்டு இதே சிறையில் 12 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். அன்று தனயன். இன்று தந்தை.

திகார் சிறையில் வழக்கமாக பின்பற்றப்படுகிற நடைமுறை இதுதான்-

காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கைதிகள் எழுந்து விட வேண்டும்.

காலைக்கடன்களை முடித்து, குளித்த உடன் காலை உணவு. ரொட்டி, டீ, பிஸ்கெட்டுகள் வழங்கப்படும்.

காலை உணவுக்கு பின்னர் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். உடற்பயிற்சியும் செய்யலாம்.

விசாரணை கைதிகளைப் பொறுத்தமட்டில் தங்கள் அறையில் ஓய்வு எடுக்கலாம்.

மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் மதிய உணவு. பருப்பு, ரொட்டி, சாதம், சப்ஜி

குறிப்பிட்ட நேரம் டெலிவிஷன் பார்க்கலாம். சிறை நூலகத்துக்கு சென்று வரலாம்.

கோர்ட்டு அனுமதித்தால் கைதிகள் குடும்ப உறுப்பினர்களையும், வக்கீல்களையும் சந்திக்கலாம்.

இரவு உணவு இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் வழங்கப்பட்டு விடும். சப்பாத்தி, பருப்பு கூட்டு, சிறிதளவு சாதம்.

இரவு 9 மணிக்கு அறை பூட்டப்படும்.

இந்த நடைமுறைகள் ப. சிதம்பரத்துக்கும் பொருந்தும்.

அவருக்கு சிறப்பு வசதிகள் என பார்த்தால் தனி அறை. அதனுள் ஒரு மரக்கட்டில், மேற்கத்திய பாணி கழிவறை உண்டு. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். அவர் விரும்பாத பட்சத்தில் சிறை கேண்டீனில் பாட்டில் குடிநீர் வாங்கி பயன்படுத்த அனுமதி இருக்கிறது.

புத்தகம் படிக்க ஒரு மேஜை மற்றும் நாற்காலி போடப்பட்டு இருக்கிறது.

அவர் மூக்கு கண்ணாடி, மருந்துகள் எடுத்துச்செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது.

அவர் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு பெற்றவர் என்பதால் அதே போன்ற பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

நேற்று முன்தினம் முதல் நாள் இரவில் சிறிதளவு ரொட்டி, பருப்பு கூட்டு, சாதம் சாப்பிட்டார் ப.சிதம்பரம். அதைத் தொடர்ந்து மரக்கட்டிலில் படுத்தார். சரியான தூக்கமின்றி தவித்தவாறுதான் அவர் இரவைக் கழித்தார் என்பதே சிறை வட்டாரங்கள் கூறுகிற தகவலாக அமைந்திருக்கிறது.

நேற்று காலையில் ப. சிதம்பரம் எழுந்தார். காலைக்கடன்களை கழித்த பின்னர் டீ, கோதுமை கஞ்சி என கொஞ்சம் சாப்பிட்டார். அதன்பின்னர் சிறை முற்றத்தில் சிறிதுநேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

அவருக்கு வாசிக்க சில நாளேடுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து அவர் ஆன்மிக புத்தகங்கள் சிலவற்றை வாசித்ததாகவும் சிறை வட்டாரங்கள் சொல்கின்றன. இப்படித்தான் கழிகிறது ப.சிதம்பரத்தின் திகார் நாட்கள்.

செப்டம்பர் 16-ந் தேதி ப.சிதம்பரத்தின் 74-வது பிறந்த நாள். 74-வது பிறந்த நாளை கொண்டாட முடியாமல், அந்த நாளையும் ப.சிதம்பரம் திகார் சிறையில் கழிக்க வேண்டிய அவலம் நேர்ந்தால் அதை என்னவென்று சொல்வது? 
Tags:    

Similar News