செய்திகள்
அஜித் ஜோகி

அஜித் ஜோகி மீது மோசடி வழக்கு - உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

Published On 2019-09-06 22:26 GMT   |   Update On 2019-09-06 22:26 GMT
சத்தீஸ்கார் முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகி மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர் உடல் நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி:

சத்தீஸ்கார் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2003 வரை முதல்-மந்திரியாக இருந்தவர் அஜித் ஜோகி (வயது 73). கடந்த 2016-ல் காங்கிரசில் இருந்து விலகிய அஜித் ஜோகி, பின்னர் ஜனதா காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அந்த கட்சி சார்பில் தற்போது எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் அஜித் ஜோகி மற்றும் அவரது மகனும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அமித் ஜோகி ஆகிய இருவரும், தாங்கள் பழங்குடியினர் என மோசடியாக சாதி சான்றிதழ் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, கடந்த 2013-ம் ஆண்டு அமித் ஜோகியை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சமீரா பைக்ரா இருவர் மீதும் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அமித் ஜோகியை கடந்த 3-ந்தேதி கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அஜித் ஜோகி மீதும் நேற்று முன்தினம் பிராஸ்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கவுரெலா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே அஜித் ஜோகி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். எனவே அவர் டெல்லியில் தங்கி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் நேற்று முன்தினம் இரவு அவருக்கு உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்ட அவர், குருகிராமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மனைவி ரேணு ஜோகி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மருத்துவமனையில் இருந்து ஜோகியை கவனித்து வருகிறார்கள். அஜித் ஜோகி மீதான வழக்கு மற்றும் அவரது உடல் நலக்கோளாறு ஆகியவற்றால் ஜனதா காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.
Tags:    

Similar News