செய்திகள்
பிரியங்கா

பொருளாதார மந்தநிலை:பிரதமர் மோடியின் அரசு மவுனம் காப்பது மிகவும் ஆபத்தானது -பிரியங்கா எச்சரிக்கை

Published On 2019-09-05 10:37 GMT   |   Update On 2019-09-05 10:37 GMT
பொருளாதார மந்தநிலை விவகாரத்தில் பிரதமர் மோடியின் அரசு தொடர்நது மவுனம் காப்பது மிகவும் ஆபத்தானது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எச்சரித்துள்ளார்.
புது டெல்லி:

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. உற்பத்தித்துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாக சரிந்தது.

பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் இந்த 8 துறைகளின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 2.1 சதவீதம் மட்டுமே இருக்கிறது.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா, பொருளாதார மந்தநிலை குறித்து தொடர்ந்து #EconomyInCrisis எனும் ஹேஷ்டாக் மூலம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்.



இந்நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கவுண்ட் டவுன்: நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து அன்றாடம் செய்திகள் வருகின்றன. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து மவுனமாக இருப்பது மிகவும் ஆபத்தான போக்கு.

மன்னிப்பு கேட்பதும், வார்த்தைகளால் சமாளிப்பதும், வதந்திகளும் எதற்கும் பயனளிக்காது. மத்தியில் ஆளும் அரசுக்கு பொருளாதார மந்தநிலைக்கு தீர்வு காண்பதற்கு வழியும் இல்லை, மக்களிடம் வாக்குறுதி அளிப்பதற்கு வலிமையும் இல்லை’ என மத்திய அரசை கடுமையாக தாக்கி பதிவிட்டுள்ளார்.




Tags:    

Similar News