செய்திகள்
புதிய குஜராத் பவனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

டெல்லியில் புதிய குஜராத் பவன் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Published On 2019-09-02 15:31 GMT   |   Update On 2019-09-02 15:31 GMT
நாட்டின் தலைநகரான டெல்லியில் அதிநவீன கட்டுமான வேலைப்பாட்டுடன் கூடிய புதிய குஜராத் பவனை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
புதுடெல்லி:

குஜராத் அரசுக்கு டெல்லியில் உள்ள சானக்யா சாலையில் குஜராத் பவன் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு விருந்தினர் மாளிகை உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள டெல்லி அக்பர் ரோடு பகுதியில் மற்றொரு விருந்தினர் மாளிகையை கட்ட குஜராத் அரசு விரும்பியது. இதற்காக 7066 சதுர மீட்டர் அளவிலான நிலத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கீடு செய்து தந்திருந்தது.



அந்த இடத்தில் சுமார் 126.82 கோடி ரூபாய் செலவில் புதிய விருந்தினர் மாளிகையை கட்டும் பணிக்கு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில், அதிநவீன கட்டுமான வேலைப்பாட்டுடன் 20,323.5 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த புதிய குஜராத் பவனை பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு திறந்து வைத்தார்.

திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்னதாகவே இந்த விருந்தினர் மாளிகையை கட்டி முடித்த குஜராத் அரசு அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக திறப்பு விழாவில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான குஜராத் மக்களிடையே உரையாற்றிய மோடி குறிப்பிட்டார்.

குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி, முன்னாள் முதல் மந்திரி ஆனந்தி பென் மற்றும் அம்மாநிலத்தின் முன்னாள், இந்நாள் மந்திரிகள் பங்கேற்ற இந்த விழாவில் குஜராத்தி மொழியில் பேசிய பிரதமர் மோடி, இந்த விருந்தினர் மாளிகை கட்டிடத்தை யார் வேண்டுமானாலும் ’ரிப்பன் வெட்டி’ திறந்து வைத்திருக்கலாம். ஆனால், உங்களை எல்லாம் சந்திப்பதற்காகவே இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்று திறந்து வைத்திருக்கிறேன்.

குஜராத்தி உணவு வகைகளில் இனிப்பு அதிகமாக உள்ளது. நீங்கள் பாகற்காய் சமையலில்கூட சர்க்கரையை சேர்த்துக் கொள்வீர்கள் என வட இந்தியாவை சேர்ந்தவர்கள் முன்னர் கேலி பேசி வந்தனர்.

ஆனால், இன்று குஜராத் உணவு வகைகள் எங்கே கிடைக்கும்? என்று அவர்கள் தேடும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது எனவும் மோடி கூறினார்.

Tags:    

Similar News