செய்திகள்
ரசாயன ஆலை வெடி விபத்து

மராட்டியத்தில் பயங்கரம் - ரசாயன ஆலையில் வெடி விபத்து - 13 பேர் பலி

Published On 2019-09-01 00:10 GMT   |   Update On 2019-09-01 00:10 GMT
மராட்டியத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 58 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை:

மராட்டிய மாநிலத்தில் வாகதி கிராமத்தில் உள்ள ரசாயன ஆலையில் நேற்று சுமார் 100 பேர் வழக்கம் போல வேலையில் ஈடுபட்டு இருந்தனர். காலை 9.45 மணி அளவில் ஆலையில் பயங்கர வெடிசத்தம் கேட்டது. உடனே தீயும் பற்றி எரிந்தது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.

ஆலை முழுவதும் தீ பரவியதால் தொழிலாளர்கள் பலர் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து வந்தனர். பல மணி போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த கோரத்தீ விபத்தில் 13 தொழிலாளர்கள் பலியாகினர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் 58 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தின் போது ரசாயன ஆலையில் தொடர்ச்சியாக குண்டு வெடித்தது போல காதை பிளக்கும் சத்தம் கேட்டதின் காரணமாக அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதாக கருதி வீடுகளை விட்டு வெளியேறினர்.

அதன் பின்னர் தான் அவர்களுக்கு ரசாயன ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிவது தெரியவந்தது.

இதற்கிடையே தீ விபத்து பற்றி அறிந்ததும் தொழிலாளர்கள் குடும்பத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு விட்டனர். அவர்கள் கதறி அழுதபடி இருந்தனர். இதனால் அந்த பகுதியே சோகமயமாக காட்சி அளித்தது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். உள்துறை மந்திரி அமித்ஷா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தார். 
Tags:    

Similar News