செய்திகள்
முகமது யூசுப் தாரிகாமியை சீதாராம் யெச்சூரி சந்தித்த காட்சி

காஷ்மீரில் தனது கட்சி நிர்வாகியை சந்தித்தார் சீதாராம் யெச்சூரி

Published On 2019-08-30 13:50 GMT   |   Update On 2019-08-30 13:50 GMT
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து காஷ்மீரில் உள்ள தனது கட்சி நிர்வாகியும், நண்பருமான முகமது யூசுப் தாரிகாமியை சீதாராம் யெச்சூரி சந்தித்தார்.
ஸ்ரீநகர்: 

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இம்மாத தொடக்கத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு சில நாட்களாக பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. 

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் தொடர்பாக ஆய்வு செய்ய சென்ற இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கடந்த 9-ம் தேதி தடுத்து நிறுத்தப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியும், தனது நண்பருமான யூசுப் தரிகாமியை சந்திப்பதற்காக ஜம்மு காஷ்மீர் செல்வதற்கு அனுமதி கோரி சீதாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 



இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு யெச்சூரி ஜம்மு காஷ்மீர் சென்று அங்குள்ள  தனது கட்சி நிர்வாகி யுசிப் தரிகாமியை நண்பராக சந்திக்கலாம் எனவும், ஆனால் எந்தவொரு அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, டெல்லியில் இருந்து விமானம் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்றார். காஷ்மீர் வந்தடைந்த யெச்சூரி பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் ஸ்ரீநகரில் உள்ள தனது கட்சி நிர்வாகியும், நண்பருமான யூசுப் தரிகாமியை சந்தித்து நலம் விசாரித்தார். 

Tags:    

Similar News