செய்திகள்
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீ‌‌ஷ்குமார்

இயல்பான அண்டை நாடாக செயல்படுங்கள் - பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரை

Published On 2019-08-30 01:04 GMT   |   Update On 2019-08-30 01:04 GMT
இயல்பான அண்டை நாடாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான நாடாகவும் செயல்படுங்கள் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரை வழங்கியுள்ளது.
புதுடெல்லி:

இயல்பான அண்டை நாடாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான நாடாகவும் செயல்படுங்கள் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரை வழங்கியுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீ‌‌ஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு இயல்பான அண்டை நாடாக செயல்பட தொடங்குவது பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியம். இயல்பான அண்டை நாடுகள் என்ன செய்யும்? அவர்கள் பயங்கரவாதிகளை அண்டை நாட்டுக்குள் தள்ளமாட்டார்கள். அவர்கள் இயல்பாக பேசுவார்கள், இயல்பாக வர்த்தகம் செய்வார்கள். இதுபோன்ற சில வி‌‌ஷயங்கள் பாகிஸ்தானில் நிகழ்வது இல்லை. கா‌‌ஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா.வுக்கு கடிதம் எழுதுவது, உண்மை நிலைக்கு மாறாக ஒரு பீதியான சூழ்நிலை இருப்பதாக வெளிக்காட்டும் நோக்கம் தானே தவிர வேறொன்றும் இல்லை. உலகம் உங்களை பொய்கள் மற்றும் சூது நிறைந்த எரிச்சலூட்டும் பேச்சாற்றல் மூலம் தான் பார்க்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

அந்த கடிதம் எழுதப்பட்ட காகிதத்தின் மதிப்புகூட அந்த கடிதத்துக்கு இல்லை. இதுபற்றி மேலும் கருத்து தெரிவித்து அதற்கு நம்பிக்கை சான்று அளிக்க விரும்பவில்லை.

இந்தியாவின் உள்விவகாரம் குறித்து பாகிஸ்தான் தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் டுவிட்டரிலும், ஊடகங்களிலும் கருத்து தெரிவிப்பதை கடுமையாக கண்டிக்கிறோம். கா‌‌ஷ்மீரில் ஒரு உயிர்கூட போகவில்லை, ஒரு குண்டுகூட சுடப்படவில்லை. அங்கு நிலைமை சீராக ஆனால் நேர்மறையான முன்னேற்றம் கண்டு வருகிறது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அரசு கொள்கையாகவே பயன்படுத்தி வருகிறது என்பதை நாங்கள் அறிவோம். இதுபற்றிய எங்கள் வருத்தத்தை பலமுறை கூறியுள்ளோம். இப்போதும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்ய முயற்சிக்கும் தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியது பற்றி எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News