செய்திகள்
பிரதமர் மோடி - சர்தார் வல்லபாய் படேல் சிலை

உலகின் தலைசிறந்த 100 இடங்களில் இடம்பெற்ற ‘Statue of Unity’ -பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2019-08-28 07:39 GMT   |   Update On 2019-08-28 07:39 GMT
உலகிலேயே மிக உயரமான சிலையான ‘Statue of Unity’ சர்தார் வல்லபாய் படேல் சிலை உலகிலேயே தலைசிறந்த 100 இடங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்:

‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் உள்ளது.

சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும் வகையில், ‘ஒற்றுமைக்கான சிலை’ (‘Statue of Unity’) என்று இது அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது.

இந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் வெளியிட்ட உலகின் தலைசிறந்த 100 இடங்கள் பட்டியலில் ‘Statue of Unity’ சர்தார் வல்லபாய் படேல் சிலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ உலகின் தலைசிறந்த 100 இடங்கள் பட்டியலில் ‘Statue of Unity’ சர்தார் வல்லபாய் படேல் சிலை இடம்பெற்றுள்ள செய்தி மிக அற்புதமானது.

சில நாட்களுக்கு முன்பு, ஒரு நாளில் 34,000 சுற்றுலா பயணிகள் பார்வையிட்ட சாதனையை படைத்திருந்தது. இது ஒரு பிரபலமான சுற்றுலா இடமாக வளர்ந்து வருவதில் மகிழ்ச்சி' என பதிவிட்டுள்ளார்.







Tags:    

Similar News