செய்திகள்
கர்நாடக மந்திரி ஸ்ரீராமுலுவின் ஆதரவாளர்கள் டயரை எரித்து போராட்டம் நடத்திய காட்சி.

துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் கர்நாடக மந்திரிகளின் ஆதரவாளர்கள் போராட்டம்

Published On 2019-08-28 07:04 GMT   |   Update On 2019-08-28 07:04 GMT
துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் கர்நாடக மந்திரிகளின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு:

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி பதவி ஏற்றார். அதன்பிறகு கடந்த 20-ந்தேதி கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது.

17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஒரு வாரத்திற்கு பிறகு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. யாருமே எதிர்பார்க்காத நிலையில் 3 துணை முதல்-மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். மூத்த தலைவர்களில் ஒருவரான கோவிந்த் கார்ஜோள், இளம் தலைவர்களான புதிய முகங்கள் லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண் ஆகியோருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு முக்கியமான துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் மூத்த மந்திரிகள் ஆர்.அசோக், ஜெகதீஷ் ஷெட்டர், சி.டி.ரவி, ஈசுவரப்பா, ஸ்ரீராமுலு உள்ளிட்டவர்கள் கடும் அதிருப்தி அடைந்து போர்க்கொடி தூக்கி உள்ளனர். முன்பு முதல்-மந்திரியாக பணியாற்றிய தனக்கு தற்போது துணை முதல்-மந்திரி பதவியை கூட வழங்கவில்லை என்று ஜெகதீஷ் ஷெட்டர் தனது கட்சி தலைமை மீது மிகுந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

முன்னாள் துணை முதல்-மந்திரிகள் ஆர்.அசோக், ஈசுவரப்பா ஆகியோர், தங்களுக்கு மீண்டும் துணை முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு பொய்யாகிவிட்டது. கூட்டணி அரசு கவிழ்ந்ததில் ஆர்.அசோக்கின் பங்கு முக்கியமானது. இதனால் அவர்கள் மிகுந்த மனவருத்தம் அடைந்து உள்ளனர்.

ஆர்.அசோக் தனது அதிருப்தி குறித்து யாரிடமும் பேசாமல் வீட்டில் மவுனமாக இருந்தார். நேற்று பா.ஜனதா புதிய தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கு ஆர்.அசோக்கை முதல்-மந்திரி எடியூரப்பா அவரது வீட்டுக்கு சென்று சமாதானப்படுத்தி தனது காரில் அழைத்து வந்தார். ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த அஸ்வத் நாராயணுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டிருப்பதை, அதே சமூகத்தை சேர்ந்த ஆர்.அசோக்கால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

இன்னொரு மூத்த தலைவர்களில் ஒருவரான மந்திரி சி.டி.ரவி, தனக்கு முக்கியத்துவம் இல்லாத சுற்றுலா துறையை ஒதுக்கியதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார்.

நான் மந்திரி பதவி வேண்டும் என்றோ, இந்த இலாகா தான் வேண்டும் என்றோ யாரிடமும் கேட்கவில்லை. எனக்கு சுற்றுலா துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லும். நேரம் வரும்போது அனைத்து வி‌ஷயங்கள் குறித்தும் பேசுவேன். நான் எனக்கு வழங்கப்பட்ட அரசு காரை திருப்பி அனுப்ப முடிவு செய்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலாகா ஒதுக்கீடு மற்றும் துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க கோரி அவரது ஆதரவாளர்கள் பல்லாரியில் விவசாய விளைபொருட்களை சந்தை அருகே சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். அவர்கள் நடுரோட்டில் டயர்களை போட்டு எரித்து தங்களின் ஆக்ரோ‌ஷத்தை வெளிப்படுத்தினர். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் உருவ படத்தையும் தீயிட்டு கொளுத்தினர். அமித்ஷா, முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோரை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

அதேபோல் ஒசப்பேட்டே நகரில் ஸ்ரீராமுலுவின் ஆதரவாளர்கள் ரோட்டில் டயர்களை போட்டு எரித்தனர். கொப்பல், சித்ரதுர்கா, யாதகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஸ்ரீராமுலுவின் ஆதரவாளர்கள் சாலையை மறித்து டயர்களை எரித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ஸ்ரீராமுலுவுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டத்தால் அந்த பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

சிக்கமகளூருவில் மந்திரி சி.டி.ரவியின் ஆதரவாளர்கள் எடியூரப்பாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சி.டி.ரவிக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

பெங்களூருவில் முதல் -மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து பேசிய மந்திரி ஸ்ரீராமுலு, தனக்கு துணை முதல்-மந்திரி பதவியை ஒதுக்காததால் தான் வருத்தம் அடையவில்லை என்றும், ஆனால் தனக்கு குறைந்த பட்சம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இலாகாவை கூட ஒதுக்காதது அதிருப்தி அளிக்கிறது என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஸ்ரீராமுலு சார்ந்துள்ள வால்மீகி சமூகத்தினர் வட கர்நாடகத்தில் அதிகமாக உள்ளனர். அவர் அந்த சமூகத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்-மந்திரி எடியூரப்பாவை மந்திரி சி.டி.ரவியும் சந்தித்து பேசினார். தனக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்காததற்கு அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறியதாக தெரிகிறது. அவரை பொறுமையாக இருக்கும்படி எடியூரப்பா கேட்டுக்கொண்டார்.

அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த முதல்-மந்திரி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பா.ஜனதா மேலிடம், கட்சியின் முடிவே இறுதியானது என்றும், அதிருப்தியாளர்களை சரிசெய்து ஆட்சி நிர்வாகத்தை சுமூகமாக நடத்த வேண்டும் என்றும் எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையே தனக்கு துணை முதல்-மந்திரி பதவி கேட்டு போராட்டம் நடத்திய ஆதரவாளர்களை மந்திரி ஸ்ரீராமுலு கண்டித்துள்ளார். யாரும் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News