செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

உடல் முழுக்க தீ... சுற்றி நிற்கும் காவலர்கள் - வைரல் வீடியோவின் உண்மை பின்னணி

Published On 2019-08-27 06:46 GMT   |   Update On 2019-08-27 06:46 GMT
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



காஷ்மீரில் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து அம்மாநில நிலவரம் பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் வைரலாகும் வீடியோவில் இந்திய பாதுகாப்பு படையினர் ஒருவரை தீயிட்டு எரிப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

ட்விட்டரில் கலீஜ் மாக் என்பவர் பதிவிட்டுள்ள வீடியோவில், உடல் முழுக்க தீயுடன் ஒருவரும், அவரை சுற்றி சில காவலர்கள் நிற்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. வீடியோவுடன், "மனித குலத்தின் மறுப்பக்கம். இந்திய படைகள் காஷ்மீர் போராட்டக்காரரை தீயிட்டு எரிக்கும் காட்சி" என தலைப்பிடப்பட்டுள்ளது.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், வீடியோ ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜூனு மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஆக்கிரமப்பு பகுதிகளை மீட்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டு எரித்துக் கொண்டிருக்கிறார். கலீஜ் மாக் பதிவிட்ட ட்வீட் வைரலாகியிருப்பதோடு, ஃபேஸ்புக்கிலும் இதே தகவல் அதிகம் பகிரப்படுகிறது. 



உண்மையில் இந்த சம்பவம் இந்த ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி நடைபெற்றிருக்கிறது. தீயிட்டு தற்கொலைக்கு முயன்றவர் பாபுராவ் சைனி என தெரியவந்துள்ளது. இவர் வனப்பகுதிக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டியிருந்ததால், அதனை இடிக்க வனத்துறை அதிகாரிகள் வந்ததால், இவர் தன் மீது தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெய்ப்பூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சைனி ஜூலை 11 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நரேந்திர மோடி அரசாங்கத்தில் தலித்துகள் எரித்துக் கொல்லப்படுவதாக இதே வீடியோ கடந்த மாதம் வைரலானது. அப்போது தற்கொலை செய்து கொண்டவர் தலித் இல்லை என்பது தெளிவானது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தாமல் அவற்றை பரப்புவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. போலி செய்திகளால் பலர் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன. 
Tags:    

Similar News