செய்திகள்
கபில் சிபல்

ஆரம்பத்தில் இருந்தே மூடி மறைக்கிறார்கள்- விசாரணை அமைப்புகளை கடுமையாக சாடிய கபில் சிபல்

Published On 2019-08-26 09:44 GMT   |   Update On 2019-08-26 09:44 GMT
ப.சிதம்பரம் வழக்கில் விசாரணை அமைப்புகள் ஆரம்பத்தில் இருந்தே மூடி மறைத்து வேலை செய்வதாக அவரது வழக்கறிஞர் கபில் சிபல் குற்றம்சாட்டினார்.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

பின்னர் வழக்கறிஞர்களின் வாதம் தொடங்கியது. ப.சிதம்பரம் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை அமலாக்கத்துறை கசியவிட்டதாக குற்றம்சாட்டினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மறுத்தார். சிதம்பரத்தின் வழக்கறிஞர்களிடம் பிரமாணப் பத்திரத்தை கொடுத்த பிறகே கசிந்துள்ளது என்றார்.



அதன்பின்னர் கபில் சிபல் பேசும்போது, “உயர்நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் அமலாக்கத்துறை அளித்த ஆவணங்களில் என்ன உள்ளது என தெரியாத போது அது குறித்து எவ்வாறு வாதிட முடியும்?. மின்னஞ்சல்கள், சொத்துக்களை அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிக்கிறார். ஆனால் இது குறித்து 3 விசாரணைகளின் போது அமலாக்கத்துறை எதுவும் தெரிவிக்கவில்லை.



வழக்கு தொடர்பான ஆவணங்களை எப்போது கைப்பற்றினார்கள்?  இது தொடர்பாக அமலாக்கத்துறை விளக்க வேண்டும். சிதம்பரத்தின் பெயரில் உள்ள ஒரு சொத்தை காட்டினாலும் மனுவை திரும்ப பெற்று கொள்கிறோம்.

ஒரு மனிதனை இல்லாமல் ஆக்குவதற்காக அவரை கைது செய்கிறார்கள். ஒரு நபரை கைது செய்வதற்கு முன் அவர் குற்றவாளியா என விசாரணை அமைப்புகள் சிந்திக்க வேண்டும். விசாரணை அமைப்புகள் ஆரம்பத்தில் இருந்தே மூடி மறைத்து வேலை செய்கின்றன” என குற்றம்சாட்டினார்.
Tags:    

Similar News