செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

குழந்தை கடத்தியதாக கொடூர தாக்குதல் - காயமுற்றவர் பற்றி வெளியான பகீர் உண்மை

Published On 2019-08-26 06:41 GMT   |   Update On 2019-08-26 06:41 GMT
குழந்தையை கடத்த முயன்றதாக பொது மக்களால் தாக்கப்பட்ட நபர் பற்றி பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில் பொதுமக்கள் ஒன்றிணைந்து அடையாளம் தெரியாத ஒரு நபரை தாக்கும் பகீர் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

வைரல் வீடியோவில் குழந்தை கடத்தலில் ஈடுபடுவோர் நாடு முழுக்க அதிகரித்து வருகின்றனர். அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது முக்கியமானதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சுற்றி நின்று அவரை தாக்கி, அவரிடம் கேள்வி கேட்கும் காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.

இதுதவிர வைரல் வீடியோ தலைப்பில் இந்த சம்பவம் நொய்டா மற்றும் புலாந்த்ஷர் பகுதிகளில் நடைபெற்றது எனவும், அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் சரிவர வேலை செய்யவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று நிமிடங்கள் ஓடும் வீடியோவில் பொதுமக்களால் தாக்கப்படும் நபரின் விவரங்களை கேட்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. தாக்கப்பட்ட நபர் கான்பூரில் இருந்து வந்ததாக தெரிவிக்கிறார்.


வீடியோவில் இருந்த வார்த்தைகளை கூகுள் சர்ச் செய்ததில் இதே வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதில் இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தின் எடாவா பகுதியில் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே சம்பவம் பற்றிய செய்திகளும் பதிவிடப்பட்டுள்ளன.

அவற்றில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 14 வயது சிறுவனை கடத்த முயன்றார். தான் கடத்தப்படுவதை உணர்ந்த சிறுவன் தனது சகோதரரை உதவிக்கு அழைத்திருக்கிறார். உடனே அங்கிருந்த ஊர் மக்கள் ஒன்று திரண்டு சிறுவனை கடத்த முயன்ற நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து எடாவா காவல் நிலைய எஸ்.பி. தெரிவித்த தகவல்களில் இந்த சம்பவத்திற்கும் குழந்தை கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதியாகியுள்ளது. மேலும் பொதுமக்களால் தாக்கப்பட்ட நபர் மன நலம் பாதித்தவர் என்றும், தாக்குதலில் வலி தாங்க முடியாமல் குழந்தை கடத்த வந்ததாக ஒப்பு கொண்டார் என்றும் தெரிவித்தார்.

இதனால் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக கூறும் நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது உறுதியாகிறது. வைரல் வீடியோவில் பகிரப்படும் தகவல் முற்றிலும் பொய் என தெரியவந்துள்ளது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பெருமளவு இழப்பை சந்தித்து இருக்கின்றனர்.

போலி செய்தியின் பாதிப்பால் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும். 
Tags:    

Similar News