செய்திகள்
திருப்பதி கோவில்

பிரம்மோற்சவ விழா - கருட சேவையன்று திருப்பதி மலைப்பாதைகளில் பைக்குகள் செல்ல தடை

Published On 2019-08-26 06:03 GMT   |   Update On 2019-08-26 06:03 GMT
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் கருடசேவையன்று மலைப்பாதைகளில் பைக்குகள் செல்ல அனுமதி கிடையாது என்று தேவஸ்தான சிறப்பு அதிகாரி கூறினார்.
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 30-ந் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 8-ந் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. அதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக, திருமலையில் உள்ள அன்னமயபவனில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான சிறப்பு அதிகாரி ஏ.சி.தர்மாரெட்டி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது. அன்று அரசு சார்பில் ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டி, ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்கிறார்.

எனவே முதல்-மந்திரி திருமலைக்கு வந்து செல்லும் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கருடசேவை, தேர் திருவிழா, சக்கர ஸ்நானம் ஆகிய நாட்களில் கடந்த ஆண்டு எப்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதோ, அதேபோல் இந்த ஆண்டும் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

வாகன சேவை நடக்கும் போதும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள், விடுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். திருட்டு சம்பவங்களை கண்காணிக்க திருமலை முழுவதும் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அதன் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே திருடர்களை கண்காணித்து பிடித்து விடலாம்.

அக்டோபர் மாதம் 4-ந் தேதி கருடசேவை நடப்பதால், 3-ந் தேதி இரவில் இருந்து 5-ந் தேதி காலை வரை மலைப்பாதைகளில் மொபட், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் ஆகியவை செல்ல அனுமதி கிடையாது. லட்டு பிரசாத டோக்கன், விடுதி அறைகள் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும்.

கூட்டத்தில் திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜன் பேசியதாவது:-

வாகன வீதிஉலாவின்போது பக்தர்களிடையே நெரிசல், தள்ளு முள்ளு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். போலீசார் மாறுவேடத்தில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். சந்தேக நபர்கள் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். திருமலை, திருப்பதியில் பல்வேறு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும்.

அங்கு செல்ல வழிகாட்டி பலகைகள் வைக்கப்படும். திருமலையில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் கள்ளத்தனமாக விற்றவர்கள் இதுவரை 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளில் மோசடி செய்வது தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News